Latest News

ஷிஃபா மருத்துவமனை கலந்துரையாடல் கூட்டம்

                            செய்திகள் , ஷிஃபா மருத்துவமனை
ஏறத்தாழ, சென்ற ஒரு வாரத்திற்கு முன் அறிவிப்புச் செய்யப்பட்டு, இன்று (18/11/2010 – வியாழன்) காலை பத்தரை மணியளவில் ஷிஃபாவின் முதல் மாடியில் பொதுக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிர்வாகக் குழுத் தலைவர் M.S.T. தாஜுத்தீன் அவர்கள் தலைமையில், A.J. தாஜுத்தீன் அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் தொடங்கிற்று.

தலைவர் தமது முன்னுரையில்,"இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே எனக்கு இது முதலாவது கூட்டமாகும்" என்று அறிவித்து, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை வந்திருந்தோரின் மனங்களில் பதியச் செய்தார். நமதூரும் காயல்பட்டினமும் ஒரே பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், நம்மைவிட அவர்கள் மருத்துவ வசதிகளில் முன்னோடியாகத் திகழ்கின்றார்கள்; ஆனால், மருத்துவ வசதிகளைத் துவக்கியத்தில் அவர்களைவிட நாம்தான் முந்தியவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, நாம் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்யத் தவறிவிட்டோம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்....

காலாகாலத்தில் அவ்வாறு நாம் மருத்துவ வசதிகளைப் பெருக்கியிருந்தால், அல்லாஹ் உதவியால், பல அகால மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட தலைவர், தமது கூற்றுக்குச் சான்றாக, தமக்கு நெருங்கிய சிலரின் மரணத்தைப்பற்றி நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தார். அத்தகைய நிலைகள் இனிமேல் வரக்கூடாது என்ற கவலை அண்மைக் காலத்தில் இதன் நிர்வாகிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டதனால்தான் இது போன்ற கலந்துரையாடல்களும் கருத்துக் கணிப்புகளும் அவசியமாகின்றன என்றார்.

ஷிஃபாவை அண்மைக் காலம்வரை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளால் வந்த பின்னடைவை ஒப்புக்கொண்ட தலைவர், இனிமேல் அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, நிர்வாகம் ஷிஃபாவை வளர்ச்சிப் பாதையில் நடாத்திச் செல்லவேண்டும் என்பதில் முனைந்துள்ளதாக அறிவித்தார். மருத்துவமனையைத் தொடர்ந்து நடத்துவதில் தொய்வு ஏற்படாதிருக்க, கடந்த சில ஆண்டுகளாக இதன் நிர்வாகிகள் குறிப்பாக இதன் பொதுச் செயலாளர் A.J. தாஜுத்தீன் அவர்கள் தமது சொந்தப் பணத்தில் கணிசமான தொகைகளைச் செலவு செய்துள்ளதை நன்றியுடன் குறிப்பிட்ட தலைவர், அச்செலவினங்களின் சுருக்கமான விவரத்தையும் வெளியிட்டார்.

இம்மருத்துவமனைக்கு உடனடித் தேவை என்று நிர்வாகிகள் கருதியவற்றைப் பட்டியலிட்ட தலைவர், மகப்பேறு மருத்துவர் (DGO) ஒருவர், குழந்தை மருத்துவர் (DCH) ஒருவர், சிறப்பு மருத்துவர் (MD) ஒருவர் என்று வகைப்படுத்தி, அவர்களுள் மகப்பேறு மருத்துவராகத் திருமதி கோமதி MBBS., DGO அவர்களை மிகச் சிரமப்பட்டு அழைத்து வந்து பணியாற்ற வைத்திருப்பதையும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றிற்கும் வசதிகள் செய்யப்படும் என்பதற்கு உறுதி கூறினார். நமதூரில் சுமார் எழுபது விழுக்காடு மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உண்மைப் படுத்துவதையும், ஆங்காங்கு 'கேன்சர்' போன்ற கொடிய நோய்கள் தலை தூக்கி வருவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நமக்கு ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலம் உரிமையாகவும், அதில் 1.34 ஏக்கர் அளவில் மட்டுமே மருத்துவமனை அமைந்துள்ளதையும், மீதி நிலம் அரசியல் பின்னணி உடையவர்களால் முடக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதனை மீட்டெடுக்க முனைப்புடன் வழக்குகளைச் சந்தித்து வருவதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தலைமையுரையைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதில் கூறப்பட்ட கருத்துகளும், அவற்றிற்கான விளக்கங்களும் வருமாறு:

வருமானக் குறைவைப் போக்க, ஒரு கம்பெனியைத் தொடங்கலாம். அதன் மூலம் வரும் இலாபத்தில் மருத்துவமனையை நடத்தலாம்.

(நல்ல பரிந்துரை)

முஸ்லிம் மக்களின் ஜக்காத் பணத்தை வசூலித்து, வசதியற்றோருக்கும் ஏழைகளுக்கும் அதிலிருந்து செலவு செய்து சிகிச்சை அளிக்கலாம்.

(ஜக்காத் பணத்தைப் பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனைச் செலவு செய்வதில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அவசியம்.)

• Project Study ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, சாதக பாதகங்களை ஆய்ந்து, முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும். (ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளதைத் தலைவர் குறிப்பிட, இதில் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி, நல்ல கருத்துக் கணிப்பையும் அதன் ஆய்வு முடிவையும் தந்துள்ள சகோதரர் மொய்னுத்தீன் அவர்களின் சுருக்கமான விளக்கமும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.)

பொதுமக்கள் டாக்டர்களின் கைராசியைப் பார்க்கிறார்கள். அதனாலும் ஷிஃபாவுக்குக் கூட்டம் வருவதில்லை. (இது போன்ற மனோநிலையில் இருப்பவர்களை நாம் மாற்ற முடியாது.)

• "பொதுமக்களின் இன்றைய trend, மருத்துவத்திற்காகப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் போகும் நிலையில் இருப்பதால், நாம் ஏன் ஷிஃபா மருத்துவமனையைப் பட்டுக்கோட்டைக்கு மாற்றக் கூடாது?" என்று ஒருவர் கேட்ட கேள்வி புதுமையாக இருந்தாலும், அதில் உள்ள சிரமங்கள் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளுக்கு உட்பட்டு மறுக்கப்பட்டது.

இந்த மருத்துவமனை ஊரின் மையப் பகுதியில் இருந்திருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்; எனவே, இதன் கிளை ஒன்றை ஊரின் மையப் பகுதியில் தொடங்கலாம்; பெரிய சிகிச்சைகளுக்கு இந்தத் தலைமை இடத்திற்கு வரலாமே என்ற புதுக் கருத்தொன்று முன்மொழியப் பட்டது. இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை உருவாகும் என்ற பின்னூட்டமும் தெரிவிக்கப்பட்டது.

தலைவரின் சஊதிப் பயணத்தின்போது, ஜித்தாவில் அதிரை மக்கள் சுமார் அறுபது பேர் கலந்துகொண்ட கூட்டத்தில், இருபத்தைந்து பேர் பொருளுதவி செய்து, ஷிஃபாவின் பங்குதாரர்களாவதற்குச் சம்மதித்ததைத் தலைவர் இடையில் குறிப்பிட்டார். அவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!" என்ற கூற்றிற்கு ஒப்ப, ஆர்வமும் வசதியும் உள்ள நல்ல மக்களின் பொருளுதவியையும் வேண்டினார்.

இறுதியாக, டாக்டர் கோமதி அவர்களின் சுருக்கமான இதயத்தை ஈர்க்கும் சிற்றுரை அமைந்தது. "நான் வளர்த்த பிள்ளை இந்த ஷிஃபா" என்று அவர் கூறியபோது, நெஞ்சங்கள் நெகிழ்ந்தன. தமது எஞ்சிய காலத்தை இந்த மருத்துவமனைக்காக அர்ப்பணிக்க இருப்பதையும் டாக்டர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மக்களின் தவறான புரிதலையும் வதந்திகள் பரப்புதலையும் களைந்து, ஒரு முன்னேற்றப் பாதையில் ஷிஃபா நடை போடவேண்டும் என்று வாழ்த்தினார்.

கூட்ட முடிவில் நன்றி கூறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு அமர்வு நிறைவுற்றது.
நன்றி
-- அதிரை அஹ்மது
தகவல் அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.