Latest News

தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.
எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | 139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.? பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.
குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்…!கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விஷம் விற்பனை செய்தால் மக்கள் வாங்கி குடிப்பார்களா? மனிதர்களின் தனி மனித ஒழுக்கம் , சேமிப்பு, கலாசாரம், பண்பாடு மறந்தது .கற்பை பற்றி நடிகர், நடிகைகளிடம் உபதேசம் வாங்கி நிதிபதிகள் தீர்ப்பு சொல்கின்றனர். வேலை பார்ப்பவர்கள் ஆண்களும் பெண்களும் பார்ட்டி என்று சொல்லி குடிக்கின்றனர். மது குடிப்பதை ஆள்வோர் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. குடிப்பதை நிறுத்துவதும் கட்டு பாட்டுடன் ஒழுக்கமாக இருப்பதும் மக்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டால் எங்கும் மகிழ்ச்சியே..

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.