ஓபிசி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உடனடியாக சான்றிதழை வழங்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளியான அரசாணையில், "இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கான இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிக்கையாக வெளியிடபட்டுள்ளது. மேலும் வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ரூபாய் 8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மேற்சொன்ன ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கம்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக்கொள்ளபட்டுள்ளார்கள். இருப்பினும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிசான்றிதழ் வழங்கப்படுவது குறித்து இந்திய அரசின் அலுவலக குறிப்பாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன. இந்த அலுவலக குறிப்புகளில் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுதியான நபர்களுக்கு வளமானபிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூபாய் எட்டு லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும் பொழுது, ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இருந்து வருகின்ற வருமானத்தை கணக்கில் கொள்ளப் படாமல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்கும்படி சாதி சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டு கொள்ள படுகிறார்கள்" என தெரிவிக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment