
ஈரோடு : தமிழகத்தில் கொரோனா 2வது அலை
பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், செய்முறை
தேர்வு மட்டும் திட்டமிட்டபடி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து
நடத்தப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள்
மற்றும் தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்படும் என அரசு சார்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 படித்து வந்த
அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கப்பட்டு, தற்காலிக
மதிப்பெண் பட்டியல் நேற்று ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டது.
அந்த
மதிப்பெண் பட்டியலில், 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பில் உயர்
மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் சாரசரி மதிப்பெண் 50 சதவீதமும், பிளஸ் 1
வகுப்பில் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்ணில் 20
சதவீதமும், பிளஸ் 2 அகமதிப்பீட்டில் பெற்ற 30 சதவீதம் என மதிப்பெண்கள்
கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 98 அரசு மேல்நிலைப்பள்ளி, 6
நகராட்சி மேல்நிலைப்பள்ளி, 12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 2
ஆதிதிராவிட நல பள்ளிகள், 82 மெட்ரிக் பள்ளிகள், 17 சுயநிதி பள்ளிகள் என
மொத்தம் 217 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 11,278 மாணவிகள், 12,612 மாணவிகள்
என மொத்தம் 23,890 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த
ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 96.99 சதவீதமாக
இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் அவர்கள் படித்த
பள்ளிகளுக்கு வந்து இணையதளத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் தற்காலிக
மதிப்பெண் பட்டியலை பெற்று சென்றனர். சிலர் இ-சேவை மையம், கம்ப்யூட்டர்
சென்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை
மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பிளஸ் 2 மாணவ-மாணவிகள்
அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இது
குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ரோடு மாவட்டத்தில்
217 பள்ளிகளில் பிளஸ் 2 படித்த அனைத்து மாணவ-மாணவிகளும் 100 சதவீதம்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல்
அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் அவர்களது
பெயர், பிறந்த தேதி, வருடம், மாதம் போன்றவற்றில் பிழை இருந்தால்
மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியிடம் தெரிவித்து, முறையாக
விண்ணப்பித்து அந்த பிழைகளை அசல் சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம்''
என்றார்.
No comments:
Post a Comment