
அதிமுகவில் ஓபிஎஸ் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி தொடர்பாகவும், ஓபிஎஸ் தொடர்பாகவும் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி வெளியிட்டகருத்து குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார். இதையடுத்து, நேற்று அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டதாக,அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவிடம் பழனிசாமியை விட நான் செல்வாக்காக இருந்தேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த கட்சி இப்படிப்பட்ட மோசமான நிலையை தற்போது சந்தித்துள்ளது. 'நாங்கள் இல்லாவிட்டால் 20 இடங்களுக்கு மேல் ஜெயிக்க முடியாது' என்றும், 'செல்வாக்கில்லாத மனிதர்ஓபிஎஸ்' என்றும் அன்புமணி சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். பாமகவை கையில் எடுத்துக் கொண்டு, தவறாக பேசியுள்ளார் என்று நான் குறிப்பிட்டதை ஏற்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது பழனிசாமியின் சர்வாதிகாரம்.
என்று நான் அங்கிருந்து வெளியில் வந்தேனோ அன்று முதல் சசிகலா, தினகரனுடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. தொலைபேசி எண்ணைக்கூட ஆய்வு செய்யலாம். அத்தனையும் மீறி இப்போது என்னை நீக்கியுள்ளனர்.
ஓபிஎஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை. அவரது கைமீறி சென்றுவிட்டதாக உணர்கிறேன். இவர்கள் ஓபிஎஸ்ஸை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது நன்றாக தெரிகிறது. அவரை ஒவ்வொரு விஷயத்திலும் கட்டம் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவரை மிரட்டி கையெழுத்து பெற்றதாக தெரிகிறது. 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேன்..' என்று அவரே என்னிடம் தெரிவித்துவிட்டார்.
பழனிசாமியை 'பியூனுக்குகூடலாயக்கில்லை' என்று பேசிய அன்புமணிக்கு எம்பி பதவி அளித்து, என்னைகட்சியை விட்டு நீக்கியதை தொண்டர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment