
மதுராந்தகம் அருகே உள்ள கிளார்ஊராட்சி ஏரிவாக்கம் பகுதியில் உள்ளநெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல், குவியல் குவியலாக கடந்த இரு மாதத்துக்கும் மேலாக தேங்கிக் கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே உள்ளது ஏரிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்நேரடி நெல் கொள்முதல் மையம்தொடங்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் மையத்துக்கு, அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த நெல் கொள்முதல் மையம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் மட்டும், நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதற்கிடையில் வியாபாரிகளும் சிலர் இந்த நெல் கொள்முதல் மையத்துக்கு, நெல்லை கொண்டு வந்து இறக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் எப்போது தங்கள் நெல் கொள்முதல் செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்து பழமத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி அருள்பரமானந்தம் கூறும்போது, 'நான் எனது விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை இந்த கொள்முதல் மையத்துக்கு கொண்டு வந்து இரு மாதங்கள் ஆகிறது. இதுவரைநெல் கொள்முதல் செய்யப்படவில்லை. கோணிப்பை வரவில்லை என்பதைக் காரணமாக கூறுகின்றனர். மழை பெய்தால் விவசாயிகள் நெல் குவியல்கள் சேதமடைய வாய்ப்பு இருப்பதால் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment