
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ல் மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான சட்டசபையை கொண்டதாகும். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஓராண்டுக்கு மேல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. பின்னர் அனைவரும் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மத்திய அரசு நடத்தியது. இருந்தபோதும் இம்மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் 2 ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் பங்கேற்க பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முடிவு!
இதில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 14 தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்படக் கூடும். அப்படி மாநில அந்தஸ்து வழங்கிய பின்னர் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதும் தலைவர்களின் கோரிக்கை.
டெல்லியில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகளையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment