Latest News

  

கட்சி தலைவருக்கு எதிராக 5 எம்பிக்கள் ேபார்க்கொடி பீகாரில் சிராக் பஸ்வானுக்கு சிக்கல்: ஐக்கிய ஜனதா தளம் காய் நகர்த்தலா?

பாட்னா: பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியின் பல தலைவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து வந்த நிலையில், 5 அதிருப்தி எம்பிக்கள் கட்சித் தலைவரான சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் அங்கம் வகித்தார். இவர், கடந்தாண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் கட்சி செயல்பட்டு வருகிறது. பீகாரில் கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, தனியாக லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. 143 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுேம லோக் ஜனசக்தி வென்றாலும் கூட, ஐக்கிய ஜனதா தளத்தின் ஓட்டுக்களை பிரித்தது.

இதனால், கூட்டணியில் பாஜவின் பலம் ஓங்கி ஐக்கிய ஜனதா தளம் பலவீனமடைந்தது. இதனால், நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடித்த பின், லோக் ஜனசக்தியிலிருந்து பலர் விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். இது கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அவருக்கு எதிராகவே 5 எம்பிக்கள் அணி திரண்டுள்ளனர். லோக் ஜனசக்தியில் சிராக் பஸ்வான் உட்பட 6 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 5 பேர் மக்களவை சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளனர். அந்த ஐந்து எம்பிக்களுக்கும் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பியும், ஹாஜிபூர் எம்பியுமான பசுபதி நாத் பராஸ் தலைமை தாங்குகிறார். இவர்கள் பசுபதி நாத் பராசை கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்துள்ளாக செய்துள்ளதாக சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனைதொடர்ந்து நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த பசுபதி நாத் பராஸ், 'முதல்வர் நிதிஷ்குமார் நல்ல தலைவர். வளர்ச்சி சார்ந்த தலைவர். நான் கட்சியை பிரிக்கவில்லை. கட்சியை காப்பாற்றி இருக்கிறேன். ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக கட்சியை சிராக் பஸ்வான் வழிநடத்தியதால் 99 சதவீத தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால் தான் சட்டமன்ற தேர்தலில் மோசமாக தோல்வியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எனது குழுவானது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியின் ஒரு பகுதியாக தொடர்ந்து செயல்படும். சிராக் பஸ்வான்னும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க முடியும்' என்றார். ஐந்து எம்பிக்கள் தனித்து செயல்படும் அறிவிப்பின் பின்னணியில், மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் எம்பியின் பெயர் அடிபடுகிறது.

மேலும், பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு எம்பி என்ற அடையாளத்துடன் பசுபதி குமார் பராஸூக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்கான வேலைகளும் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஐந்து எம்பிக்களும் ஐக்கிய ஜனதா தளத்தில் சேருவது குறித்து பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை அவ்வாறு நடந்தால், சிராக் பஸ்வான் மக்களவையில் தனியாளாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின் கடந்த ஓராண்டில், மஹிதானி எம்எல்ஏ ராம்குமார் சர்மா, பல மாவட்டத் தலைவர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட தலைவர்கள் லோக் ஜனசக்தியை விட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தனர்.

காங். எம்எல்ஏக்கள் 13 பேர் கட்சி தாவல்
பீகார் சட்டப்பேரவையில் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 13 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார், கட்சியின் தேசிய தலைவர் ஆர்சிபி சிங், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கட்சியின் தலைவர் ஆர்சிபி சிங், ' காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அசோக் சவுத்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இருந்து வெளியேறியபோதே கட்சி உடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டிருக்கும் கப்பல் போன்றது. அதில் இருந்து சிலர் குதிக்க விரும்புகின்றனர். கட்சியில் இருந்து 13 எம்எல்ஏக்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைய இருக்கின்றனர்' என்றார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.