
கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் முதலமைச்சரின் புகைப்படம் இருக்கலாம், கட்சியின் சின்னம் தான் இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "கொரோனா நிவாரணம் கொடுக்கும் திமுகவினர் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் பேனர்கள் வைத்துள்ளனர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே நியாய விலைக் கடைகள் அருகில் ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிவாரண உதவி வழங்கும் போது அரசை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கூறினர்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை என்றும் ஆனால் ஆளுங்கட்சியின் சின்னத்தைதான் பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் நிவாரணம் வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிபாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
newstm.in
No comments:
Post a Comment