
கரோனா பாதித்த பெற்றோரின், குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு செய்தார். மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இயங்கி வரும்தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும்அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இங்கு வைத்து பராமரிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக இந்த குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கரோனா தொற்று குறையும் என்று நம்புகிறோம். இதற்காக அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டுள்ளோம். ஆக்சிஜன் தேவைகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய குளிர்நிலையை அடைய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். மேலும், ரூர்கேலாவில் இருந்து 5 டிரக்குகளில் தூத்துக்குடிக்கு திரவ ஆக்சிசன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகளைச் சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 255 1953, வாட்ஸ் அப் எண்99447 46791-ல் தொடர்பு கொள்ளலாம். சட்டப்பேரவை உறுப்பினர் கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர்விஷ்ணு, மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment