
கார்ப்பரேட், எம்எஸ்எம்இ உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்க இந்தியஅஞ்சல் துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடிதங்கள், மணியார்டர்களை விநியோகிப்பது, சேமிப்புக் கணக்கு, கிசான் விகாஸ் பத்திரங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே அஞ்சல் துறை வழங்கி வந்தது. இந்நிலையில் போட்டிகள் நிறைந்த தற்போதைய சந்தை சவாலை சந்திக்க அஞ்சல் துறையும் தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது.
குறிப்பாக அஞ்சல் நிலையங்களில் வங்கி, பாஸ்போர்ட், ஆதார்சேவை, மாநகராட்சி வரிகள் கட்டுவதற்கான சேவை, உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இந்நிலையில், சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள்,கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய சேவையைத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனி நபர்கள் விரைவு அஞ்சல் மூலம் (ஸ்பீட் போஸ்ட்) அனுப்பும் கடிதங்கள் மற்றும் பார்சல்களை குறிப்பிட்ட முகவரியில் விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளை இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உள்ள டிராக்கிங்வசதி மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், கார்ப்பரேட், நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை அனுப்பும் ஆயிரக்கணக்கான பார்சல்கள், கடிதங்களை டிராக் செய்ய முடியாத நிலை உள்ளது. அவர்களுக்காக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணினி சர்வர் இணைப்பு
இதற்காக, தற்போது ஏபிஐ- (Application Programming Interface) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்தத் தொழில்நுட்பம் மூலம் நிறுவனங்கள், தங்களது பார்சல்களை இந்திய அஞ்சல்துறையின் விரைவு அஞ்சல் மூலம்அனுப்பும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வது வரையிலான அனைத்து நகர்வுகளையும் கணினி மூலம் டிராக்கிங் செய்து அறிந்து கொள்ளலாம்.
இதற்காக, எங்களுடைய கணினி சர்வருடன், தொடர்புடைய நிறுவனத்தின் கணினி சர்வர் இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்பட்டவுடன் அந்த நிறுவனத்துக்கு பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்களுடைய பார்சல்களின் நிலைகுறித்து டிராக்கிங் செய்து கொள்ளலாம். ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதை சரி செய்யலாம்.
இதன்மூலம், பார்சல்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சென்று சேர்வது உறுதி செய்யப்படுகிறது.
கட்டணத்தில் தள்ளுபடி
கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவை மாதம்தோறும் அஞ்சல் நிலையங்கள் மூலம் ரூ.1 முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்தால், அவர்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடியும், ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்தால், 30 சதவீதம் வரையும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சேவையை கார்ப்பரேட், ஸ்டார்ட்-அப், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment