
உடுமலை : உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில்,
வெள்ள காலங்களில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்
நுட்பத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது.உடுமலை
அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே
எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில்
அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி, வண்ண மீன் பூங்கா, திருமூர்த்தி அணை என
சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து
ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில்,
குருமலை பகுதியிலிருந்து உருவாகும் பல்வேறு காட்டாறுகள் பஞ்சலிங்க அருவியாக
கொட்டுகிறது.
ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து; சராசரி
உயரத்திலிருந்து, சாரலாய் மாசுபடாமல் கொட்டும் மூலிகை குணங்கள் நிறைந்த
நீர் ஆகிய காரணங்களினால், சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மையமாக
உள்ளது.மலைத்தொடர்களில் மழை பெய்து, காட்டாறுகளில் நீர் அதிகரித்து, கடந்த,
2008 மே 25ல், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, 13 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து, குருமலை பகுதியில் மழை குறித்து முன்னறிவிப்பு பெறுதல்,
சுற்றுலா பயணிகள் அனுமதி மறுப்பது, எச்சரிக்கை அலாரம் உள்ளிட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும், முழுமையாக இல்லாததால், மழைக்காலங்களில்
சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், மாவட்ட பேரிடர்
மேலாண்மைத்துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், முழுவதும் நவீன
தொழில் நுட்பத்தில், தானியங்கி முறையில், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி
பொருத்தப்பட்டுள்ளது.இதனை வடிவமைத்த ஆராய்ச்சியாளர் பிராங்க்லின்
கூறியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக, அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை
கருவி அமைக்கப்பட்டுள்ளது. அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை,
தானியங்கி முறையில் எச்சரிக்கும் வகையில், சிறப்பு தொழில் நுட்பமும், ஒலி
பெருக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அருவிக்கு செல்லும் வழியில், பல
இடங்களில் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு வருகிறது.மலை மேல், காட்டாறுகளில்
நீர் வரத்து அதிகரித்தால், தானியங்கி முறையில் எச்சரிக்கை செய்வதோடு,
கட்டுப்பாட்டு மையம், கோவில் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கும். மலைமேல்,
குருமலை, வால்பாறை பகுதிகளிலும் வானிலை அறியும் தொழில் நுட்ப கருவிகள்,
மழையளவு, வெயில் அளவு என அனைத்தையும், அவ்வப்போது தகவல் கிடைக்கும்.மேலும்,
வனச்சூழல் பாதிக்காத வகையில், சோலார் மின் உற்பத்தி வழியாக, இக்கருவிகள்
இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.முதல் முறையாக அருவி மற்றும்
மலைப்பகுதி வானிலை அறியும் தொழில் நுட்பம் பரிசோதனை முயற்சியாக,
திருமூர்த்திமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து பல்வேறு புதிய
தொழில் நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளது.மேலும், வனத்தை காக்க
வேண்டியதன் அவசியம், வன விலங்குகள் குறித்தும், நீர் பாதுகாப்பு குறித்தும்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு என, பல்வேறு வகையில் பயன் தரும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment