
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் அதற்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புதிய பொறுப்பாளர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். 38 பேர் கொண்ட இந்த குழுவில், எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, பிரின்ஸ், கணேஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில், அமெரிக்கை நாராயணன், மணிசங்கர் ஐயர், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், 16 பேர் அடங்கிய ஊடக ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இவ்வளவு பெரிய குழுவால் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாரம் இல்லாததால், யாருக்கும் எந்தப் பொறுப்பும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதனால் காங்கிரஸில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment