
கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், முதியோருக்கு வீடு தேடிவரும் 5 சேவைகள் உள்ளிட்ட 10 திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார்.
இந்த திட்டங்களுக்கான அரசு அறிவிக்கை வரும் 10ம் தேதி வெளியிடப்படும் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீடுகளில் தனிமையில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்தல், சான்றிதழ் வழங்குதல், சமூகபாதுகாப்பு ஓய்வூதியம், மருந்துகள் வழங்குதல், முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கான விண்ணப்பம் அளித்தல் ஆகிய 5 சேவைகள் வீடுகளுக்கே வழங்கப்படும். மற்ற சேவைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறுகையில் ' மக்களுக்கு தேவையான 10 அம்ச திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதற்கான அறிவிக்கை வரும் 10ம் தேதி வெளியிடப்படும்.
கேரளாவில் உள்ள வீடுகளில் பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பதால், பெரும்பாலும் முதியோர் தனிமையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு உதவுவதற்காக 5 சேவைகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளன.

அத்தியாவசிய மருந்துகள் வழங்குதல், சான்றிதழ் வழங்குதல், சமூகபாதுாப்பு ஓய்வூதியம் வழங்குதல் என 5 சேவைகள் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.
மரங்களை வெட்டாமல், பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படும் வீடுகளுக்கு விரிச்சலுகை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முறையாக சுற்றுச்சூழல்துறை, நிதித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கை வெளியிடப்படும்.
பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்கும் வகையில் கூடுதலாக கவுன்சிலர்கள் அமர்த்தப்படுவார்கள். தற்போது 1,024 கவுன்சிலர்கள் ஒப்பந்த அடிப்படையில் பள்ளிகளில் பணி புரிகிறார்கள், இது இரு மடங்காக உயர்த்தப்படும்.
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆன்-லைன் கவுன்சிலிங் வசதி செய்யப்படும். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், வல்லுநர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து எதிர்காலத் திட்டமிடலுக்காக ஆன்-லைன் திட்டம் கொண்டுவரப்படும்.
ஆண்டுக்கு ரூ.2.50லட்சம் வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க ரூ.ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். ஊழலைத் தடுக்கும் வகையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்தில் யார் வேண்டுமானாலும் சரியானத் தகவல்களை வழங்கலாம். புகார் அளிப்பவரின் பெயர் பாதுகாக்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகளில் டிஜிட்டல் கல்வித்திட்டம் கொண்டுவரப்படும். பள்ளிக் குழந்தைகளுக்கும், பதின்பருவ மாணவர்களுக்கும் சரிவிகித சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தபப்டும்
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment