Latest News

  

தமிழகத்தில் கிளப்புகள், ஓட்டல்களில் நாள் முழுவதும் மதுபானம் விற்கப்படுகிறதா?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மதுபானம் விற்க உரிமமம் பெற்றுள்ள கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் விற்கப்படுகிறதா? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் புதிய ரயில் நிலைய சாலையில் தனியார் விடுதியில் மதுபான கூடம் அமைக்க எப்எல்3 உரிமம் வழங்குவதற்கு எதிராக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் சுவாமிநாதன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் மதுபான கூடம் திறக்க முடிவு செய்துள்ள பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பள்ளி, கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதனால் அனுமதி வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறார். துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்லது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொதுப்பிரச்சினை, தனிப்பிரச்சினை எதுவாக இருந்தாலும் உண்மையான காரணங்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம். இதனால் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக இருப்பதால் மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

இந்த வழக்கில் பல்வேறு விஷயங்கள் விவாதிப்பட்டன. இதனால் இந்த வழக்கில் மதுவிலக்கு ஆயத்தீர்வை செயலர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். வழக்கறிஞர் ஏ.கண்ணன் நீதிமன்றத்துக்கு உதவும் அமிகஸ்கியூரியாக நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் இதுவரை மதுபான கூடங்கள் அமைக்க எத்தனை எப்எல் 2 (கிளப்), எப்எல் 3 (நட்சத்திர ஓட்டல்கள்) உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது? இந்த உரிமதாரர்களுக்கு 5 ஆண்டுகளில் மாவட்டம் வாரியாக எவ்வளவு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது? எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற பிறகு தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதி 17 எவ்வாறு உறுதி செய்யப்படுகின்றன?

இந்த விதி மீறல் தொடர்பாக எத்தனை உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழ்நாடு மதுபான விதியை பின்பற்றாமல் எத்தனை எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் இயங்குகின்றன? இந்த மதுபான கூடங்களில் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் விற்கப்படுகிறதா? இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக எதிர்மனுதாரர்கள் டிச. 7-ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.