கேதார்நாத்: கடும் பனிப்பொழிவினால் திங்களன்று கேதார்நாத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில முதல்வர்கள் பலமணிநேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இமயவலையில் உள்ள ஹிந்துக்களின் புனிதயாத்திரைத் தலங்களில் கேதார்நாத்தும் ஒன்று. ஆண்டுதோறும் குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோவில் மூடப்படுவது நடைமுறையாகும். அதன்படி திங்களன்று கேதார்நாத் ஆலயம் மூடப்பட உள்ளதால், முன்னதாக ஆலய தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இருவரும் திங்கள் காலை கேதார்நாத் வந்திருந்தனர்.
அவர்கள் தரிசனம் முடிந்து கிளம்பும் வேளையில் பருவநிலை மோசமாகி கடும் பனிப்பொழிவு வீசியது. அந்த சமயத்தில் விமானப் பயணம் செய்வது ஆபத்தானது என்பதால் அவர்கள் இருவரும் அங்கேயே தங்கியிருந்தனர். பலமணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு திங்கள் மாலை அவர்கள் இருவரும் உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள கவுச்சார் நகரத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை உத்தரகாண்ட் மாநில சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவரான அசோக் குமாரும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

No comments:
Post a Comment