Latest News

  

"புதிய கல்விக் கொள்கை மூலம் பெண் கல்விமுறையை பறிக்க எத்தனிக்கிறது பா.ஜ.க அரசு" - கனிமொழி சாடல்!

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பெண்களுக்கான சமூக ஊடக பயிற்சி பாசறை கூட்டம் விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் தமிழரசி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி கூட்டத்திற்கு தி.மு.க மகளிர் அணி செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி காணொளி காட்சி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை வரை சென்று பெண்களால் தான் பிரச்சாரங்களை செய்ய முடியும். இருப்பினும் இப்போதைய சூழலில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டிய நிலையில் சமூக ஊடகங்களின் வழியே அனைவரும் எளிதாகச் சென்றடையலாம்.

பெண்கள் எப்படி சமூக வலைதளங்கள் மூலம் அனைவரையும் சென்றடைய முடியும் என்பதை இந்த பயிற்சி பட்டறையின் மூலம் கற்றுக்கொண்டு நம்முடைய வாக்குறுதிகளை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கூறியதுபோல தேர்தல் நேரத்தில் தவறான செய்திகளும் பொய்யான வாக்குறுதிகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் பொய் தகவல்களை பரப்புவதை நாம் கண்டறிய வேண்டும். சாதி, மதம் போன்ற பிளவுகளை ஏற்படுத்த சமூக வலைதளங்கள் மூலமாக சில முயற்சி நடக்கிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பொய் தகவல்களை பரப்புவதை நாம் பார்க்க முடிகிறது.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அதை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். சமூக வலைதளத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என இந்த பயிற்சி பட்டறை சிறந்த முறையில் கற்றுத்தரும். தி.மு.க மட்டுமே பெண்களுக்கான உரிமையை பெற்றுத் தந்தது. பெண் சுய மரியாதை, பெண் சுதந்திரம் பொருளாதார உரிமை, கல்வி, அதிகாரம் என எல்லாவற்றிற்கும் போராடுவது தி.மு.க மட்டுமே. பெண்களை தற்சார்பு உடையவர்களாக தன்னம்பிக்கை உடையவர்களாக மாற உழைப்பது தி.மு.க தான். அதற்கு முழுமையான உழைப்பை வழங்கியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். மத்திய மாநில அரசுகள் பெண்களின் கல்வி சுதந்திரம் அனைத்தையும் அழிக்க கூடிய செயல்களை செய்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை மூலம் பெண்களின் கல்வியில் முழுமையாக பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். நம்முடைய எதிர்காலமும் நம் சந்ததிகளின் எதிர்காலமும் நல்ல முறையில் அமைய தி.மு.க ஆட்சியமைக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து எப்படி இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என இந்த பயிற்சி பட்டறை மூலம் கற்று வெற்றியை நோக்கி உழைக்கக் வேண்டும்" என கனிமொழி எம்.பி. உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சரஸ்வதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.