
காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா தேர்தல் பிரசாரத்தின்போது தவறுதலாக காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இமார்த்தி தேவியை ஆதரித்து ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது அவர் பாஜகவுக்குப் பதில் தவறுதலாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்துள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த விடியோவில் சிந்தியா பேசியதாவது:
"எனது தாப்ரா மக்களே, உங்கள் கைகளை உயர்த்தி நவம்பர் 3-ம் தேதி 'கை' சின்னத்துக்குதான் வாக்களிப்பீர்கள் என்பதை என்னிடமும், சிவராஜ் சிங் சௌஹானிடமும் உறுதிப்படுத்துங்கள்" என்றார்.
கை சின்னம் காங்கிரஸ் சின்னம் என்பதை உணர்ந்த சிந்தியா உடனடியாக பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களியுங்கள் என்று திருத்தினார்.
மாநில காங்கிரஸ் சுட்டுரைப் பக்கத்தில் இதுகுறித்து பதிவிடுகையில், "மத்தியப் பிரதேச மக்கள் வாக்கு இயந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்துக்குதான் வாக்களிப்போம் என்று உங்களிடம் உறுதியளித்துள்ளார்கள்" என்று கேலி செய்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"இது வாய் தவறி வருவது. இது அனைவருக்கும் ஏற்படும். சிந்தியா அதை உடனடியாக திருத்திக்கொண்டார். அவர் பாஜக தலைவர் என்று அனைவருக்கும் தெரியும்" என்றார்.
2002-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிந்தியா 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கட்சியிலிருந்து விலகினார். சிந்தியா ஆதரவு எம்எல்ஏ-க்கள் 22 பேர் ராஜிநாமா செய்ததையடுத்து, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் சிந்தியா பாஜகவில் இணைந்தார்.
No comments:
Post a Comment