
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர்களை சேர்க்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாடக்குளம் சக்திநகரைச் சேர்ந்த கே.ஆர்.வாசுதேவா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நீட் தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர், அரியலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த மருத்துவ கல்லூரிகளில் 1650 சீட்டுகள் உள்ளன.
நான் மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வில் 521 மதிப்பெண் பெற்றேன். முதல்வரின் அறிவிப்பால் நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1650 சீட்களும் சேர்க்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் கலந்தாய்வு பட்டியலில் 11 கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை.
தற்போது அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் காணொலி வழியாகவே வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து முதலாம் ஆண்டு வகுப்புகளை காணொலியில் நடத்தலாம்.
1650 மருத்துவ சீட்டுகளை கலந்தாய்வில் சேர்த்தால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கூடுதலாக அரசுப் பள்ளி மாணவர்கள் 124 பேருக்கு சீட் கிடைக்கும்.
தமிழகத்தில் நிவர் புயலால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதலாவது கலந்தாய்வு நவ. 30-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதலாவது அல்லது 2வது கலந்தாய்வில் புதிய 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1650 சீட்டுகளையும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment