
தூத்துக்குடியில் செங்கலுக்கு பதிலாக காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கொண்டு புதிய குளியலறை கட்டிடத்தை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
திடக்கழிவு மேலாண்மையில் புதிய முயற்சியாக சோதனை அடிப்படையில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன உலகில் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்கு காரணம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தான். குறிப்பாக பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் அதிகளவில் சேருவதால் அவற்றை மேலாண்மை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி முறையில் அழிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் பயன்பாடு அதிகம் காரணமாக தினம் தோறும் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகமாக வந்து சேருகின்றன.
இந்நிலையில் கழிவு பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றும் நோக்கத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி புதிய குளியலறை கட்டிடத்தையே உருவாக்கியிருக்கிறது தூத்துக்குடி மாநகராட்சி. செங்கல்களுக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி இந்த குளியலறை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பெருமாள்புரம் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில் இந்த குளியலறை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 100 முதல் 150 தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதால், பணி முடிந்து செல்லும் போது குளித்துவிட்டு சுத்தமாக வீடுகளுக்கு செல்லும் வகையில் இந்த குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் புதிய முயற்சியாக இதனை செய்துள்ளோம். கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவுடன் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அந்த காலி பாட்டில்களை தனியாக சேகரித்து வைத்திருந்தோம். அதனை கொண்டு தான் இந்த குளியலறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பாட்டில்கள் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1700 பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலி பாட்டில்களில் கடற்கரை மணலை நிரப்பி, மூடியை பெவிக்கால் போட்டு ஒட்டி, அந்த பாட்டில்களை செங்கல்களுக்கு பதிலாக பயன்படுத்தியுள்ளோம். சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் நல்ல விதமாக ஒட்டிப் பிடித்துக் கொண்டுள்ளன.
செங்கல்கள் போல இதுவும் வலுவாக இருக்கும் என நம்புகிறோம். சோதனை அடிப்படையில் தான் இந்த முயற்சியை செய்துள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இதேபோல் மற்ற இடங்களிலும் கழிப்பறை, குளியலறை போன்ற கட்டிடங்களை கட்ட முடிவு செய்துள்ளோம் என்றார் ஆணையர்.
No comments:
Post a Comment