Latest News

  

துணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு

தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு ஏப்.5-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது.

தமிழக அரசில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்கான 19 இடங்களுக்கும், வணிக வரித்துறை உதவி ஆணையர் பணிக்கான 10 இடங்களுக்கும், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் பணிக்கான 14 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான 7 இடங்களுக்கும், மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி பணிக்கான 1 இடத்துக்கும் என மொத்தம் 69 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 20-ல் வெளியிட்ட அறிவிக்கைப்படி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

ஆனால், கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலானதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் -1 முதல் நிலைத்தேர்வு தேதி ஜனவரி 03, 2021 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகலில் நடக்கிறது. மொத்த இடங்கள் 69.

தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் பணிக்கு 12 இடங்கள். தேர்வுத் தேதி ஜனவரி- 09 முற்பகல் மற்றும் பிற்பகல், ஜனவரி 10 முற்பகல் மட்டும்.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்களைத் தவிர மற்ற பணியிடங்களுக்கு பொதுப் பிரிவினருக்கு 32 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 37 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் அப்படியே தொடரலாம்.

குரூப்-1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net ஆகியவற்றில் அறியலாம்.

குரூப்-1 பணியில் தேர்வாகி காவல் துறை, ஆட்சிப் பணியில் இணைபவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தரம் உயர்த்தப்படுவார்கள்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.