
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விவசாயம் செழிக்க நேற்றுமுன்தினம் இரவு எருதுகட்டு விழாவும், இன்று காலை மஞ்சுவிரட்டும் நடைபெற்றன.
சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்தில் உள்ள வீரையா கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் எருதுகட்டு விழா நடப்பது வழக்கம்.
எருது கட்டுக்காக வெள்ளை நிற காளங்கன்று தேர்வு செய்யப்பட்டு வளர்ப்பர். இந்தாண்டு எருதுகட்டு விழா நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு மேல் நடந்தது.
வீரய்யா கோவில் முன்பு காளையை கட்டி வைத்து கிராமமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். காளையின் முன்னங்கால்களில் தலா 2 சலங்கைகள் வீதம் 4 சலங்கைகளை கட்டினர். கழுத்தில் நீண்ட வடகயிறு கட்டப்பட்டு, மாடு அவிழ்த்துவிடப்பட்டது.
காளையை சிறிது தூரம் ஓட விட்டு சீரணி அரங்கம் அருகே இளைஞர்கள் நிறுத்தினர். அப்போது காளையின் காலில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளில் மூன்று கீழே விழுந்தது.
இதையடுத்து இந்தாண்டு முப்போகம் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். சலங்கை விழுவதை வைத்து விளைச்சலை விவசாயிகள் கணிக்கின்றனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் காளையை தரிசனம் செய்தனர். மேலும் நேற்று பகலில் தடையை மீறி மஞ்சுவிரட்டும் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் காளையை அடக்க முயற்சித்தனர்.
No comments:
Post a Comment