
சென்னை: இப்பதான் விசிகவுக்கு நிம்மதி பெருமூச்சே வந்திருக்கும்.. கூட்டணியில்தான் இருக்கோமோ, இல்லையா என்ற குழப்பத்தில் இருந்த நிலையில், திமுகவுடன் தேர்தலை சந்திப்போம் என்று விசிக உறுதியாக தெரிவித்துள்ளது.. அத்துடன், பாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதிமுக - பாமகவுக்கும் எத்தகைய இணக்கமான போக்கு ஏற்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.. சில தினங்களாகவே அதிமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அது மேற்கொண்டு வருகிறது.. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம். அதனால் பாமகவும், அதிமுகவுக்கு முரணாகவே இருக்கிறது.
'பாமக ஆட்சிக்கு வந்தால்தான், எல்லாருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் ஐயா இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்.. இந்த சமயத்தில்தான், பாமக - திமுகவுடன் இணைய போவதாக ஒரு பேச்சு எழுந்தது.. இன்னொரு பக்கம், டாக்டர் ராமதாஸ், "விசிகவுடன் எந்த பகையும் இல்லை என்று ஒரு டிவி பேட்டியில் சொல்லவும், அது மேலும் பரபரப்பாகிவிட்டது.
ஆனால், சாதிய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, பாமகவுடன் கூட்டணி அமைப்பது முட்டாள்தனமாக அமையும் என்று திருமாவளவன் விளக்கம் தந்து இந்த விஷயத்தை ஆஃப் செய்தார்.. இதற்கு பிறகு இன்னொன்னொறையும் சொன்னார்கள்.. போகிற போக்கை பார்த்தால், பாஜக - திமுக என்றுகூட கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.
அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால், நிச்சயம் விசிக, திமுக கூட்டணியுடன் இருக்காது.. ஒருவேளை இதை மனசில் வைத்துதான், சாதீய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திருமா சொன்னாரோ? என்னவோ? என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுக -பாஜகவும் ஒருவரையொருவர் பாய்ந்து பாய்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சுவர் விளம்பரத்தில்கூட நீயா, நானா என்ற போட்டி எழுந்துள்ளது. வழக்கமாக திமுக - அதிமுகவுக்குதான் இந்த சுவர் போட்டி வரும்.. ஆனால், பாஜக - திமுக என்ற நிலை உருவெடுத்து வருகிறது. அதனால், பாஜக - திமுக உறவு என்ற அனுமானத்துக்குகூட இடமில்லாமல் போய்விட்டது. இதற்கு பிறகுதான் விசிகவுக்கு தெம்பு வந்துள்ளது.
எத்தனையோ வதந்திகள், சலசலப்புகள் உலவி வந்த நிலையில், இதற்கெல்லாம் ஒரு முற்று புள்ளிவைத்து பேசியுள்ளார் திருமாவளவன்.. ஈழ விடுதலை போராளி திலீபன் அவர்களின் 33-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருக்கிறது... அந்த கூட்டணியிலேயே தொடர்வோம்... எங்களிடத்தில் எந்த ஊசலாட்டமும் இல்லை.. தடுமாற்றமும் இல்லை.. குழப்பமும் இல்லை.. திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
சாதியவாதிகள், மதவாத சக்திகள் தமிழகத்தில் தலைதூக்கி விட கூடாது. நாட்டின் நலன், மக்களின் நலன் சனாதன சக்திகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்தல் உறவை அணுகுகிறோம்... ஆகவே திமுக தலைமையிலான கூட்டணியில் தான் பிஜேபியை இங்கு கால் விடாமல் தடுக்க முடியும்" என்று உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி.. இந்த முறை எப்படியும் உதயசூரியன் சின்னத்திலேயே நிறைய தொகுதிகளில் போட்டியிட திமுக யோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், கடந்த முறை எம்பி தேர்தலில் அதிருப்தியை சம்பாதித்த விசிக, இந்த முறை திமுகவுடன் தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment