
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்படாததால் சிவகங்கையில் நடந்த ஆசிரியர் தினவிழாவை ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற 11 பேருக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், சங்குமுத்தையா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முனியாண்டி, மகேந்திரன், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் பகீரதநாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் நல்லாசிரியர் விருது ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோருக்கு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று நடந்த ஆசிரியர் தினவிழாவை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் கூறுகையில், ''உரிமைக்காக போராடிய ஆசிரியர்களை கடந்த 2 ஆண்டுகளாக விருதுக்கு பரிசீலனை செய்ய கூட கல்வித்துறை தயாராக இல்லை.
கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் தினவிழாவை புறக்கணிக்கிறோம்,'' என்று கூறினார்.
No comments:
Post a Comment