Latest News

மார்பக புற்றுநோய் செல்களை கொல்லும் "தேனீக்களின் விஷம்" - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.

ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவை, மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தேனீக்களின் விஷத்தில் மெலனோமா போன்ற சில புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான குணம் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம், நேச்சர் பிரசிஷன் ஆன்காலஜி என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?

300க்கும் மேற்பட்ட தேனீக்கள் மற்றும் பெரு வண்டுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

"தேனீக்களில் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய 25 வயது ஆய்வாளரான சியாரா டஃபி.

நஞ்சின் ஒரு செறிவு, வெறும் ஒரு மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவையாக இருந்தது. அதுவும் அவை மற்ற செல்களுக்கு பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நஞ்சு அதிக அளவில் கொடுக்கப்படும் போது, அதன் விஷத்தன்மை அதிகரித்தது.

மேலும் மெலிட்டின் என்ற பொருள், புற்று நோய் செல்கள் வளர்வதை தடுப்பதிலும், அவற்றை அழிக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாவே தேனீக்களின் விஷத்தில், இந்த மெலிட்டின் காணப்படும் அல்லது அதனை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.

மார்பக புற்றுநோய்களில் மிகவும் மோசமானது ட்ரிப்பிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தலாமா?

இந்த ஆய்வை "பிரமிக்கத்தக்கது" என்று விவரித்துள்ளார் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

"புற்றுநோய் செல்கள் பரவி வளர்வதை மெலிட்டின் எப்படி தடுக்கிறது என்பதை இந்த ஆய்வு காண்பிக்கிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எவ்வாறு மனித நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது" என்று பேராசிரியர் பீட்டர் தெரிவித்தார்.

ஆனால், இதனை பெரிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்க உதவும் என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 source: bbc.com/tamil

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.