
இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் நகரங்களில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் படிப்படியாக சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, மெட்ரோ ரயில் சேவை பயணிகள் மற்றும் அதன் செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அது குறித்து பயணிகள் அறிய வேண்டிய 10 முக்கிய குறிப்புகளை இங்கு வழங்குகிறோம்.
- செப்டம்பர் 7ஆம் தேதி முதல் பகுதியளவில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஒரு தடத்துக்கு அதிகமான பாதைகளில் சேவைகளை வழங்கும் மெட்ரோ நிறுவனங்கள், செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அனைத்து பாதைகளிலும் சேவைகளை வழங்கும்.
- தினசரி இயக்கப்படும் ரயில்கள் முதல் 5 நாட்களுக்கு வெவ்வேறு கால நேர அட்டவணையிலும் செப்டம்பர் 12 முதல் முழுமையான அளவிலும் இயக்கப்படும்.
- கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள ரயில் நிலையங்களின் முகப்பு வாயில் மற்றும் புறவாயில் மூடப்பட்டிருக்கும்.
- சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும் குறியீடுகள் செய்யப்பட்டிருக்கும்.
- அனைத்து பயணிகள், ரயில் நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாகும். குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முக கவங்களை கட்டணம் கொடுத்து வாங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்.
- கொரோனா வைரஸ் ஏசிம்டமெட்டிக் எனப்படும் வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள், தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே ரயில் நிலைய மேடை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- அறிகுறி இருப்பவர்கள், அருகே உள்ள கோவிட் பரிசோதனை நிலையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள். ஆரோக்கிய சேது செயலியை செல்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களின் சமீபத்திய உடல்நிலை மதிப்பீட்டு முடிவை காண்பிக்க பயணிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
- அனைத்து ரயில் நிலையங்களிலும் சேனிட்டைசர்கள் எனப்படும் கை சுத்திகரிப்பான்களை கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி தரப்படும். ஸ்மார்ட் கார்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பயண அட்டை ரீ-சார்ஜ் ஊக்குவிக்கப்படும். ரயில்களில் டோக்கன் மற்றும் பேப்பர் பயணச்சீட்டு, முறையான சுத்திகரிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பயன்படுத்த அனுமதி உண்டு.
- பயணிகள் இரும்பால் செய்யப்பட்ட உடைமைகளை கொண்டு செல்வதை தவிர்க்கவும் குறைவான உடைமையை கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
- அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் உள்ளூர் காவல்துறை, உள்ளூர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பை பெற்று மெட்ரோ நிர்வாகம் சேவையை வழங்கும்.
மஹாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் தொடரும்
இந்த வழிகாட்டுதல்கள் டெல்லி, நொய்டா, கொச்சி, பெங்களூரு, மும்பை வழித்தடம்-1, ஜெய்பூர், ஹைதராபாத், மஹா மெட்ரோ (நாக்பூர்), கொல்கத்தா, குஜராத், உத்தர பிரதேச மெட்ரோ (லக்னெள) ஆகிய இடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு பொருந்தும்.
எனினும், மஹாராஷ்டிரா அரசு இதுவரை அங்கு மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடிவு செய்யவில்லை. அங்குள்ள மும்பை மெட்ரோ வழித்தடம்-1 மற்றும் மஹா மெட்ரோ ரயில் சேவைகள், அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படும் அல்லது மாநில அரசு எப்போது சேவையை தொடங்க தீர்மானிக்கிறதோ அப்போது முதல் இந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment