
சென்னை: பெண்கள், சுய விருப்பத்தின் பேரில்தான் தண்டனை கைதிகளை திருமணம் செய்கிறார்களா என்பதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேசிய மகளிர் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்றும், தண்டனைக்கு உள்ளானவரை பெண்கள் திருமணம் செய்ய எந்த சட்டமும் தடையாக இல்லை தேசிய மகளிர் ஆணையம் பதில் அளித்துள்ளது.
தண்டனை கைதிகளாக இருப்பவர்களுக்கு விடுப்பு அல்லது பரோல் கோரி மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி அஸ்லாமுக்கு ஒரு மாத விடுப்பு அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஷாம்மா மனு தாக்கல் செய்தார்.
மதுரை விரைவு நீதிமன்றம், இவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனை கைதியை திருமணம் செய்வதற்கு முன் பெண்ணிடம் வலுக்கட்டாயமாக சம்மதம் பெறப்பட்டதா, சொந்த விருப்பத்தில் நடக்கிறதா என்பதை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.
பொதுவாக சிறை கைதிகளை திருமணம் செய்து கொள்ள எந்த பெண்ணும் முன்வர மாட்டார். சமுதாயத்தில் சகஜ வாழ்வில் உள்ளவர்களை திருமணம் செய்யவே பெண்கள் பல நிபந்தனைகளை விதிக்கின்றனர். தண்டனை கைதிகளை திருமணம் செய்யும் பெண்களின் வாழ்க்கை முடங்கி விடுகிறது. உடல் மற்றும் மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருமணமாகும் பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கணவனின் அன்பும் ஆதரவும் தேவை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றை சேர்க்கிறோம். உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலாளர் பிரீத்தி குமார் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேசிய மகளிர் ஆணைய சட்டப்படி ஆணையம் என்பது ஆலோசனைக்குழு மட்டுமே என்றும், அரசுக்கு உத்தரவிடும் அமைப்பு அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு
மேலும், திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்றும், தண்டனைக்கு உள்ளானவரை பெண்கள் திருமணம் செய்ய எந்த சட்டமும் தடையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் தண்டனை கைதியை திருமணம் முடிக்கும் பெண்ணிடம் ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது மதம் மற்றும் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக நடத்தப்படுகிறதா என விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment