Latest News

இலங்கையில் பதிவாகும் மர்ம நிலஅதிர்வுகள் - அச்சத்தில் மக்கள்

கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 29ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நிலஅதிர்வொன்று பதிவாகியிருந்தது.

இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எனினும், இது நிலஅதிர்வொன்று என கூறிய புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வா, நிலநடுக்கம் கிடையாது என குறிப்பிட்டார்.

குறிப்பாக இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வாக இதனை கருத முடியாது எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நில நடுக்கத்தை பதிவு செய்யும் கருவியில் அதிர்வுகள் ஏற்பட்டமைக்கான பதிவுகள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நிலஅதிர்வு பதிவான கண்டி பகுதிக்கு புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் விசேட குழுவொன்று ஆய்வுகளுக்காக சென்றுள்ளது.

சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையத்தின் புவிசரிதவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி நில்மினி தல்தெனவின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த குழுவினர் இதுவரை நடத்திய விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் ஊடாக குறித்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில், முதல் அதிர்வு பதிவாகி 4 நாட்களின் பின்னர் இன்று காலை 7.10 அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை பாரிய சத்தமொன்றை அடுத்து, நில அதிர்வொன்று பதிவானதாக அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் பிபிசி தமிழுக்கு கூறினர்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வாவை தொடர்பு கொண்டு வினவியது.

கண்டி நகரை அண்மித்த சில பகுதிகளில் நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிலநடுக்கம் பதிவாகும் கருவில் நில அதிர்வொன்று ஏற்பட்டமைக்கான பதிவுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக விசாரணைகள் மற்றும் ஆய்வுகளை செய்து வருவதாகவும் புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வா தெரிவிக்கின்றார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.