
செவிலியர் உள்பட 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டது.
தமிழகமெங்கும் கரோனா நோய்த் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 23 வயது செவிலியர், 29 வயது பணியாளர் ஆகிய 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக 2 பேரும் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெரு குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் உள்ள கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். செவிலியர் உள்பட 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, ஆலத்தூர் ஊராட்சி மன்றப் பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
No comments:
Post a Comment