
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதலுக்கு பிறகு இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் ஒன்றை தென் சீனக் கடலுக்கு இந்தியா அனுப்பியது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
2009ஆம் ஆண்டு முதல் செயற்கை தீவுகளை கட்டியெழுப்பியும், தனது படைகளை நிலை நிறுத்தியும், தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.
அந்த பிராந்தியத்துக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சென்றதற்கு சீனா அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
"கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்பு, தென் சீனக் கடல் பகுதிக்கு இந்திய கடற்படை தனது போர்க் கப்பலை அனுப்பியது. தென் சீனக் கடலில் பெரும்பாலான பகுதி தனது பிராந்தியத்தின் ஓர் அங்கம் என்று கூறும் சீன ராணுவம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது," என்று இந்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
லடாக் மோதலுக்குப் பிறகு உடனடியாக இந்திய போர்க்கப்பல் தென் சீனக் கடலுக்கு அனுப்பப்பட்டது.
வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போதும் சீன தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையுடன் தொடர்பு
தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையும் தனது படைகளை நிலை நிறுத்தியுள்ளதால், அமெரிக்க கடற்படையுடனும் இந்திய கடற்படை தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாக அரசு வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன.
பொதுவெளிக்கு இந்த நடவடிக்கை தெரியக்கூடாது என்பதால் மிகவும் ரகசியமாக இந்திய போர்க் கப்பல் அங்கு அனுப்பப்பட்டதாகவும் வெளிநாட்டு ராணுவ கப்பல்கள் அந்த பிராந்தியத்தில் நடமாடுவது குறித்து இந்திய கப்பலுக்கு தொடர்ந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உள்ள மலாக்கா நீரிணையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன.
அந்தப் பகுதி வழியாகவே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீன கப்பல்கள் நுழையும் என்பதால், அவற்றைக் கண்காணிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலும் சீனாவுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்களே மலாக்கா நீரிணை வழியாகப் பயணிக்கின்றன.
இந்தியாவின் கிழக்கு அல்லது மேற்கு கடல் பகுதிகளில் ஏதாவது நடந்தால் அதை எதிர்கொள்ளும் முழு திறனும் இந்திய கடற்படைக்கு இருப்பதாகவும் இந்திய அரசு தரப்பில் இருந்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment