
உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் சட்டீஸ்கர் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மத்தியக் குழுக்களை அனுப்புகிறது
நோயைக் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது, பரிசோதனை செய்வது, திறனுள்ள முறையில் மருத்துவ மேலாண்மை அளிப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக மத்தியக் குழுக்கள் உதவி அளிக்கும்.
உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கு உயர் நிலையிலான மத்தியக் குழுக்களை அனுப்ப மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாநிலங்களில் திடீரென்று கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில இடங்களில் இந்த நோயினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
கோவிட் நோயைக் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது, பரிசோதனைகள் செய்வது, நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களுக்குத் திறனுள்ள முறையில் மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்றவற்றை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களின் முயற்சிகளுக்கு இந்தக் குழுக்கள் உதவி அளிக்கும். நோயை உரிய காலத்தில் கண்டறிவது, நோய் உள்ளவர்களைக் கண்டறிந்த பிறகு, தொடர் நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை தொடர்பான சவால்களைத் திறம்பட சமாளிப்பதற்கும், இந்தக் குழுக்கள் மாநிலங்களுக்கு வழிகாட்டும். பெருந்தொற்றுநோய் நிபுணர் ஒருவர், பொது சுகாதார நிபுணர் ஒருவர் உட்பட பல துறை நிபுணர்கள் இந்த மத்தியக் குழுக்களில் இடம் பெறுவார்கள்.
இந்த நான்கு மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 54 ஆயிரத்து 666 ஆக உள்ளது. அதற்கு அடுத்ததாக ஒடிசாவில் 27 ஆயிரத்து 219 நோயாளிகள் உள்ளனர் சட்டீஸ்கரில் நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 520. ஜார்கண்டில் 11 ஆயிரத்து 577 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்த நோயாளிகளில் 2 லட்சத்து இருபத்தையாயிரத்து 632 நோயாளிகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒடிசா ஒரு லட்சத்து 934. ஜார்கண்ட் 38 ஆயிரத்து 435. சட்டீஸ்கர் 30 ஆயிரத்து 92. உத்தரப்பிரதேசத்தில் அதிக அளவாக 3 423 பேர்
மரணமடைந்துள்ளனர். ஒடிசாவில் 482, ஜார்க்கண்டில் 410, சட்டீஸ்கரில் 269 பேர் மரணமடைந்துள்ளனர்.மத்திய அரசு அவ்வப்போது மத்தியக் குழுக்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோவிட் நோயை எதிர்ப்பதற்கான சவால்களையும் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்க உதவுகிறது. தடை ஏதும் இருந்தால் அவற்றை அகற்றவும் வகை செய்கிறது.
No comments:
Post a Comment