
தேச விரோத மற்றும் ஏழை விரோத சக்திகள் இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியையோ அவரது அரசையோ நேரடியாகக் குறிப்பிடாத அவர், "இந்திய மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கருத்துரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் ஜனநாயகமும் அரசமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று தேசத்தை நிறுவிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்டோர் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வருவாயில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய பங்கை மத்திய அரசு வழங்காமல் இருப்பது, கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் மாணவர்களுக்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்திய அரசு திட்டமிட்டு இருப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் பெருமளவில் சரிந்துள்ள போதிலும், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் பங்கு நிலையை மத்திய அரசு கட்டாயம் வழங்கும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இன்று கடிதம் ஒன்று எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்கு 'முழுநேரமான', 'வெளியில் நன்கு அறியப்பட்ட', 'களப் பணியாற்றும்' தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்திற்கு பின், அவர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
பின்னர் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு பின், சோனியாவே அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment