
(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட 10 இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் இரண்டாம் கட்டுரை இது)
ருகியா சகாவத் ஹுசைன், பெண்ணிய சிந்தனையாளர், கதாசிரியர், நாவலாசிரியர், கவிஞர், வங்காளத்தில் முஸ்லிம் சிறுமிகளின் கல்விக்காக ஒரு இயக்கத்தை நடத்தியவர், முஸ்லிம் பெண்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கியவர்.
முஸ்லிம் சிறுமிகளுக்காக ஒரு பள்ளியை அவர் நிறுவினார். அந்தபள்ளி நூற்றுக்கணக்கான சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியது. இருப்பினும், முஸ்லிம் பெண்களை பற்றிமட்டுமே அவர் சிந்திக்கவில்லை, ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தின் மரியாதை மற்றும் உரிமைகளுக்காக அவர் பணியாற்றி வந்தார்.
அனைவரும் ஒன்றுகூடி வாழும் சமூகத்தையும், உலகத்தையும் உருவாக்க அவர் விரும்பினார். பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உலகின் வணிகம் அவர்கள் கைகளில் இருக்கவேண்டும் என்பதே அவரது கனவு.
ருகியா 1880 இல் பிரிக்கப்படாத இந்தியாவின் ரங்க்பூர் மாவட்டத்தின் பராபந்த் பகுதியில் பிறந்தார். இன்று இந்த பகுதி வங்கதேசத்தில் உள்ளது. நில உரிமையாளர் பரம்பரை. சகோதரர்கள் நவீன பள்ளி - கல்லூரியில் கல்வி பயின்றனர். ஆனால் சகோதரிகளுக்கு அவ்வாறு இல்லை. ருகைய்யாவிற்கு கல்விகற்க ஆசை.
அவரது மூத்த சகோதரர், யாருக்கும் தெரியாமல் தங்கைக்கு கல்வி கற்பித்தார். இரவுநேரம் வீட்டில் எல்லோரும் தூங்கும்போது சகோதரர், இந்த சகோதரிக்கு, வீட்டின் ஒரு மூலையில் பாடம் சொல்லித்தருவார் என்று தெரியவந்துள்ளது.
ருகியா மிகவும் புத்திசாலி. உலகைப் பார்ப்பதற்கான அவரது கண்ணோட்டம் மாறுபட்டது. இதை அவரது சகோதரர் நன்கு அறிந்திருந்தார். எனவே, ருகியா திருமண வயதை எட்டியதும், அவருக்கு கவலை ஏற்பட்டது. அவரது முயற்சியால் தான், 1898 இல், தனது பதினெட்டாவது வயதில் ருகியா, பிஹாரின் பாகல்பூரில் வசிக்கும் , வயதில் மிகவும் மூத்தவரான சகாவத் உசேன் என்பவரை மணந்தார்.
சகாவத் ஹுசைன் நன்கு படித்தவர், வாழ்வில் முன்னேற்றம் கண்டவர் , ஒரு அதிகாரியாக இருந்தார். ருகியா ஏதாவது செய்ய, சிந்திக்க மற்றும் புரிந்து கொள்ள நிறைய வாய்ப்புகளை அவர் வழங்கினார். ஆயினும், இருவரும் நீண்டகாலம் சேர்ந்து இருக்கவில்லை. 1909 இல், சகாவத் ஹுசைன்ன் காலமானார்.
ருகியா உலகிற்கு ஒரு எழுத்தாளராகவே முதலில் தெரிகிறார். சகாவத் ஹுசைன் காலமாவதற்கு முன்பே, வங்க மொழி இலக்கியம் குறித்து ருகியா ஓரளவு அறிந்திருந்தார். தனது பாடல்களின் மூலம், பெண்களின் மோசமான நிலையைப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு புரிய வைக்கும் முக்கியமான முயற்சியைத் அவர் தொடங்கினார்.
வரலாற்றில் பெண்கள் முதல் கட்டுரை - தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?
அவரது ஒரு கட்டுரையான 'ஸ்த்ரீ ஜாதிர் அபோந்தி', பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சொல்லப்போனால், இதில் பெண்கள் தங்களுக்கிடையே, தங்கள் நிலைமை பற்றி கசப்பான உரையாடலை நடத்துவதாகவே எழுதப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அது ஆண் ஆதிக்க சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது.
அன்றைய சமுதாயத்தில் பெண்களின் அவல நிலை பற்றிய வாக்குமூலமாக அது இருந்தது. இந்தியாவில் ருகியாவுக்கு முன்பு எந்த ஒரு பெண்ணும் இதுபோன்ற கேள்விகளையும், இது போன்ற விஷயத்தையும் இத்தனை வலுவுடன் எழுப்பியதில்லை. அவர் இந்த கட்டுரையை எழுதும்போது, அவரது வயது 22-23 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவரது படைப்புகளில் ஒன்று சுல்தானாஸ் ட்ரீம்ஸ் அதாவது சுல்தானாவின் கனவு. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நீண்ட கதை. இதை ஒரு சிறு நாவல் என்றும் அழைக்கலாம். நாடு மற்றும் சமுதாயத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பெண்கள் செய்யும் ஒரு நாட்டின் கதை இது. பெண்கள் அறிஞர்களாக இருக்கின்றனர்.
ஆண்கள் வீடுகளுக்குள் வாழ்கின்றனர். இது பெண்ணிய கற்பனை, அறிவியல் புனைகதை என்று அழைக்கப்பட்டது. இந்த கதை 115 ஆண்டுகளுக்கு முன்பு 1905 ஆம் ஆண்டில் மெட்ராஸிலிருந்து வெளியான இந்தியன் லேடீஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டது, அது அந்தக் காலத்தின் மிகவும் மதிப்புமிக்க ஆங்கில இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க மொழி பேசாத பகுதிகளில், இந்த ஒரு கதையின் காரணமாக ருகியா மிகவும் பிரபலமானார். ஏனெனில், அவரது பெரும்பாலான படைப்புகளும் வங்க மொழியிலேயே உள்ளன. யோசித்துப் பாருங்கள், ருகியாவின் இந்த படைப்பும் வங்க மொழியிலேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? உலகம் அவரை அறிந்திருக்குமா? இப்போது கூட, ஹிந்தி மொழி பேசும் பெரும்பகுதியை சேர்ந்தவர்களுக்கு, அவரது படைப்புகள், அறிமுகமில்லாதவை..
ருகியா ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், அவர் பெண்ணிய சிந்தனை உலகில், ஒரு தலைவராக இருந்திருப்பார்.
அப்ரோத்பாசினி, மோதிச்சூர், பத்மோராக், ஸ்த்ரீஜாதிர் அபோந்தி, சுல்தானாஸ் ட்ரீம்ஸ் ஆகியன அவரது முக்கிய படைப்புகளாகும்.
பெண்களின் நிலை மற்றும் உரிமைகள் பற்றி எழுதியது மட்டுமல்லாமல், யதார்த்த உண்மைநிலையை மாற்றவும் பணியாற்றிய முதல் பெண், ருகியா.
சகாவத் ஹுசைன் இறந்த பின்னர் அவரது விருப்பத்தின்படி, அவரது நினைவாக, முதலில் 1910 ஆம் ஆண்டில் பாகல்பூரிலும் பின்னர் 1911 இல் கொல்கத்தாவிலும் சிறுமிகளுக்காக ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அவரது முயற்சியால், வங்காளத்தில் முஸ்லிம் சிறுமிகளின் கல்வி குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.
ருகியா நிறைய இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் இந்தப்பள்ளியை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்தப்பள்ளி வங்காள முஸ்லிம் சிறுமிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ருகியா நிறுவிய சகாவத் நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இன்றும் கொல்கத்தாவில் செயல்படுகிறது.
ஆனால் இந்தப்பள்ளியை தொடர்ந்து நடத்தியதாலும், முஸ்லிம் சிறுமிகளுக்கு நவீன கல்வி அளித்ததாலும், ருகியா, ஏராளமான எதிர்ப்பையும் தடைகளையும் எதிர்கொண்டார்.
அவர் இந்திய பெண்ணிய சிந்தனையின் வலுவான தூணாக இருந்தார். பெண்கள், குறிப்பாக முஸ்லிம் சிறுமிகளின் கல்வியை மேம்படுத்துவதில் பெரிய பங்கு வகித்தார். முஸ்லிம் பெண்களை ஒன்று திரட்டுவதில் பங்கு பணியாற்றினார். அவரால் ஈர்க்கப்பட்டு, பல பெண்கள் எழுதத் தொடங்கினர். சமூக சீர்திருத்தம் மற்றும் பெண்கள் உரிமை இயக்கத்தில் அவர் பங்கேற்றார்.
1932 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று, அவர் தனது 52 வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையை எழுத தொடங்கினார். அதற்கு அவர், நாரீரோ ஓதிகார் அதாவது பெண்களுக்கான உரிமைகள் என்ற தலைப்பை அளித்திருந்தார்.
பெண்களுக்காக பணியாற்றியதாலும், அவர்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வந்ததாலும், வங்கப்பகுதியில் மக்கள் இவரை , ராம்மோஹன் ராய் மற்றும் ஈஸ்வர்சந்த் வித்யாசாகர் போல கருதுகின்றனர். "அவர் இல்லாதிருந்தால் நாங்கள் இருந்திருக்க மாட்டோம், ருகியா எங்கள் மூதாதையர் போன்றவர்," என்று சொல்கிறார்கள், வங்காள பிராந்தியத்தின் சிறுமிகள்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment