
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம்- கேரளா எல்லையில் தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்திருக்கும் தமிழக அரசின் சோதனை சாவடியை, கேரள எல்லை ஆரம்பிக்கும் கோட்டைவாசல் பகுதியில் மாற்றியமைக்க உத்தரவிடக்கோரி தென்காசியைச் சேர்ந்த மாடசாமி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், தற்போது கேரளா எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளியரையில் சோதனை சாவடி அமைந்துள்ளது.
இதனால் எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக எல்லையில் உள்ள பல கிராமங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் இந்த கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால் புளியரையிலுள்ள சோதனை சாவடியை கோட்டை வாசல் பகுதிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், புளியரை சோதனைச் சாவடி பகுதிக்கு கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவு மற்றும் பிற கழிவுகளை கொண்டு வந்த 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment