
இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் முக்கியமான கூறுகளில் ஒன்றாக வாய்ப்புள்ள இடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருதப்படுகிறது.
பள்ளிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படும் அல்லது ஊக்குவிக்கப்படும் என்பது இதில் விவரிக்கப்படவில்லை.
இது குறித்த விவரங்களைப் பார்க்கும் முன்னர் தாய்மொழிக் கல்வி மற்றும் மொழிப்பாடங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம்.
தாய்மொழிக் கல்வி கட்டாயமா?
ஊடகச் செய்திகள் சிலவற்றில் குறிப்பிடுவதுபோல ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி கட்டாயப் பயிற்று மொழியாக இருக்கும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை.
எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை, இயன்றவரை எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய் மொழி அல்லது வட்டார மொழி வாயிலாக கல்வி கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலுமே இது பின்பற்றப்படும் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
மேற்கண்ட மொழிகளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். அவ்வாறு பாடப்புத்தகங்கள் அந்த மொழிகளில் கிடைக்காவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிகழும் பரிமாற்றம் உள்ளூர் மொழி அல்லது தாய் மொழியிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இரண்டு மொழிகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.
மும்மொழிக் கொள்கை
இரண்டு முதல் எட்டு வயது வரையிலான காலகட்டத்தில் மொழிகளை குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்ளும் திறனுடன் இருப்பார்கள் என்பதாலும், பன்மொழி அறிவு இளம் மாணவர்களுக்கு அதிகமான அறிவுசார் பயனளிக்கும் என்பதாலும், தாய்மொழி அல்லாமல் வேறு இரு மொழிகளிலும் எழுதவும் படிக்கவும் மூன்றாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் பயிற்றுவிக்கப் படுவார்கள் என்றும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளை கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்குவதில் மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சி எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் அறிவியல் மற்றும் கணிதவியல் பாடங்கள் இரண்டு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் என்றும் அதன்மூலம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவர்கள் மேற்கண்ட பாடங்கள் குறித்து அவர்களின் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே பேச முடியும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியில் சமஸ்கிருத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பாலி, பாரசீகம் பிரகிருதி உள்ளிட்ட மொழிகள் விருப்ப மொழிகளாக இருக்கும்.
மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமல்லாது சீன மொழி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, கொரிய மொழி உள்ளிட்ட வெளி நாட்டு மொழிகளும் விருப்ப மொழிகளாக விருப்பப் பாடங்களாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியைப் பொருத்தவரை 2018ஆம் ஆண்டில் 26.3 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (அதாவது பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களில் உயர்கல்வியில் சேருவோர் விகிதம்) 2030ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் எனும் இலக்கை கொண்டுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கை.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பல்துறை நிபுணத்துவம் பெற்றவையாக மேம்படுத்துவது, மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிப்பது, அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, தன்னாட்சி அதிகாரங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசும் இந்த புதிய கல்விக் கொள்கையில் பயிற்றுமொழி மற்றும் ஆராய்ச்சி மொழியாக எந்தெந்த மொழிகள் இருக்கும், அவற்றை உயர்கல்வியில் பயன்படுத்துவது எவ்வாறு ஊக்குவிக்கப்படும் என்பது குறித்த குறிப்பான வரையறை எதுவுமில்லை.
உயர்கல்வியில் தாய்மொழி, வட்டாரமொழிக் கல்வியை ஊக்குவிப்பதை வெளிப்படையாக சுட்டவில்லை என்ற சூழ்நிலையில், எந்த வகையில் இது உயர் கல்வியில் தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனிடம் பிபிசி தமிழ் வினவியது.
பல்கலைக்கழகங்களில் உள்ள சில துறைகளில் தற்போது மாணவர்கள் பயிலத் தேர்வு செய்யாத நிலை உள்ளது. இப்போதே உயர்கல்வியில் பயிற்றுமொழியை முடிவு செய்வது மாணவர்கள் இல்லாத துறைகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நிலை உண்டாகும்.
தாய்மொழிக் கல்வி குழந்தைகளை அறிவு ரீதியாக மேம்படுத்தும் என ஆய்வுகள் கூறுவதால், பள்ளிக்கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அது அடுத்த சில ஆண்டுகளில் அது உயர்கல்வியில் பிரதிபலிக்கும் என்கிறார் அவர்.
ஒரு பள்ளி தொடங்கினால்கூட முதலில் ஐந்தாம் வகுப்பு வரை உள்கட்டமைப்பை மேம்படுத்திவிட்டு அதன்பின்தான், மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையானவற்றை செய்வார்கள். அதுபோல இப்போது பள்ளிக்கல்வியை செய்யப்படும் மாற்றங்கள் அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகளில் உயர்கல்வியையும் தாய்மொழியில் படிக்க உதவும் என்கிறார் வானதி சீனிவாசன்
உயர்கல்வி எந்த மொழியில்?
இது குறித்து கல்வியாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பிபிசி தமிழ் பேசியது.
அவர் இது தொடர்பாக பகிர்ந்துகொண்ட பார்வையைத் தொகுத்தளிக்கிறோம்:
புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழியாக கல்வி அல்லது உள்ளூர் மொழி வழியாக கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயன்றால் எட்டாம் வகுப்புவரை அதே முறையை பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாம் அல்லது எட்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவு இந்த அறிக்கையில் இல்லை.
உயர் கல்வியில் தமிழ் இல்லாமல் போகுமா?
தாய்மொழி அல்லாமல் ஆங்கிலம் வழியாகப் பயிற்றுவிக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் அது வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. இதற்கு பிறகு ஒரு மாணவர் தாய்மொழி, உள்ளூர் மொழி ஆகியவற்றை ஒரு மொழிப்பாடமாக பயிலலாம், ஆனால் அந்த மொழி வாயிலாக முற்றிலும் பயில முடியும் என எந்த உத்தரவாதமும் இல்லை.
தமிழகம் போன்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வி முடித்த பின்பு உயர்கல்வி வரை கூட தமிழ் மொழியிலேயே படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஐந்தாம் அல்லது எட்டாம் வகுப்பு வரையில் மட்டுமே தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் உயர்கல்வியை தாய்மொழி மூலம் அல்லது உள்ளூர் மொழி மூலம் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்
இதற்கு பின்னால் இருக்கும் நோக்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதுதான்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு பதிலாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதையே இந்த புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது.
அவ்வாறு வெளிநாட்டவர்கள் இந்திய உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கவே பெரும்பாலும் வாய்ப்பு இருக்கும்.
அந்த நோக்கில்தான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழிக்கல்வி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் ஆகிய இரண்டு மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஒரே தேசம் ஒரே கல்வி' திட்டம்
'ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு' என்பது போல 'ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம்' என்பது இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் அமல்படுத்தப்படுகிறது.
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அதன் பின்னர் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதாவது கல்வி மீதான முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளுக்குமே உண்டு என வழிவகை செய்யப்பட்டது.
ஆனால் பொதுப் பட்டியல் என்று வரும்பொழுது அதில் இரண்டு அரசுகளுமே இருப்பதால் மத்திய அரசின் கைதான் ஓங்கி இருக்கும். இந்தப் புதிய கல்விக் கொள்கையும் அப்படித்தான் இருக்கிறது.
உலகம் முழுவதும் 197 நாடுகள் இருக்கின்றன அவற்றில் சுமார் 170க்கும் மேலான நாடுகளில் மக்கள்தொகை தமிழகத்தை விடக் குறைவானது.
தமிழகம் உள்ளிட்ட எந்த இந்திய மாநிலத்தையும் ஒரு மாநிலமாக மட்டுமே பார்க்க முடியாது. தனக்கென ஒரு மொழி, நிலவியல் அமைப்பு, பண்பாடு என தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தனித்தனி தேசிய இனங்களுக்கான இடமாக இருக்கின்றன.
ஆனால், இந்த புதிய கல்விக்கொள்கை பெரும்பாலும் மத்திய அரசால் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது.
ஊழலுக்கு வழிவகுக்கும்
இதன்படி வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எந்த மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் அவர்களது கல்வி நிறுவனத்தை நிறுவுகிறார்களோ அங்கு அனுமதி பெற வேண்டிய தேவை இருக்காது.
நேரடியாக இந்திய அரசிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். ஒரே இடத்தில் குவிந்துள்ள முடிவெடுக்கும் அதிகாரம் என்பது அதிகமான ஊழலுக்கு வழிவகுக்கும்.
நாடுகள் வளர்ச்சி அடைந்ததற்கான குறியீடுகளில் ஒன்றாக ஏற்றுமதி பார்க்கப்படுகிறது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருக்கும் முதல் பத்து நாடுகளில் தாய் மொழி வாயிலாகவே உயர் கல்வி கற்பிக்கப்படுகிறது. அவற்றில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளவை.
நாம் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் என்று அதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டு இங்கு இருக்கும் ஆங்கில மோகத்தை கண்டுகொள்ளாமல் இருந்து விடக்கூடாது.
பட்டப்படிப்பு வரை தாய்மொழி வாயிலாகப் படிப்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் பிரபா கல்விமணி.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment