
ஊரடங்கு நீட்டிப்பது மக்கள் நலன் சார்ந்தது என்றாலும் வெறுமனே மருத்துவ நிபுணர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தி ஊரடங்கை நீட்டிப்பதால் என்ன பயன்? உற்பத்தியாளர்களுடனும் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என அகில இந்திய உற்பத்தியாளர் சங்க நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ரகுநாதன் இன்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
''ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. மக்கள் நலனுக்காக எடுத்த முடிவு என்றாலும் வெறுமனே மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பது சரியாக இருக்காது என்கிறோம். உற்பத்தியாளர்களுடனும் ஆலோசனை நடத்த வேண்டும்.
ஆகஸ்டு 31-ம் தேதி வரை 150 நாட்கள் வேலையில்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலை. 25, 30 சதவீத ஆட்கள் மட்டுமே வேலைக்கு வருகிறார்கள். பல அம்சங்களைப் பாதிப்பாக நாங்கள் கருதுகிறோம். எவ்வளவு ஆட்களுக்கு நாங்கள் சம்பளம் தருவது. வேலை செய்பவர்களுக்கு, வேலை இல்லாதவர்களுக்கு எனப் பல சிக்கல்கள் உள்ளன. உற்பத்தி இல்லை என்பது கடினமான ஒன்று.
முதலில் பொதுப் போக்குவரத்தான ரயில், பேருந்து இயக்கப்படவில்லை இரண்டாவது இ-பாஸில் உள்ள நடைமுறைச் சிக்கல். வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லை. அவர்களை அழைத்துவர தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது, எப்படி அழைத்து வருவது என்பது சிக்கலாக உள்ளது.
35 சதவீதம் தொழிற்சாலைகள் இயங்கும் மாநிலம், தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை இயக்க அரசு உதவி புரிகிறது, மறுப்பதற்கில்லை. அனைத்து சீசன்களும் சென்றுவிட்டன. மருத்துவர்கள் சொல்வதை மட்டும் வைத்து இனி ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தம் இல்லை. கடையைத் திறந்தால் டிமாண்ட் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. பொதுப் போக்குவரத்தைக் குறிப்பிட்ட தளங்களிலாவது இயக்கி இருக்க வேண்டும்.
மத்திய அரசே இ-பாஸ் தேவை இல்லை என்று சொன்ன பிறகு மாநிலத்தில் இதை ஏன் அமல்படுத்துகிறீர்கள். இ-பாஸ் முறையில் பல வசதிகள் அறிவிக்கப்பட்டாலும் நடைமுறையில் அது சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறது. கரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளலாம், பசி பட்டினியுடன் எப்படி வாழ முடியும்?
ஓரிரண்டு நாள் பசி தாங்கலாம். பசியே வாழ்க்கை என்றால் என்ன ஆகும் நிலை. ஆகஸ்டு முடிந்துவிட்டால் அரையாண்டு நிலை முடிகிறது. ஆறு மாதங்களாக டர்ன் ஓவர் இல்லை என்றால் நிலை என்ன ஆகும். அரசு தவணையிலிருந்து விலக்கு அளித்தாலும் மற்ற தவணைகள் ஆறு மாத டர்ன் ஓவர் குறித்து வங்கிகள் கேட்டு நெருக்கும். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் நிலை கடினமாக உள்ளது. முதல்வர் இந்த நிலையை ஆராய்ந்து முடிவெடுத்து உதவ வேண்டும்''.
இவ்வாறு ரகுநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment