
தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பாமாயில் உற்பத்தி 25% வரை குறைந்து வருவதாக மலேசிய பாமாயில் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா
பாதிப்பால் பல்வேறு நாடுகளில் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து
தடைபட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் புலம்பெயர்
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். ஊரடங்கில் படிப்படியாக
தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு
திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர் தொழிலாளர்களை
நம்பியிருந்த தொழில்கள் சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளன.
அந்த
வகையில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மலேசியாவில் பாமாயில் உற்பத்தி 25%
வரை குறைவதாகவும், இனி வரும் மாதங்களில் இது மோசமடையக் கூடும் என்றும்
மலேசிய பாமாயில் கழகம் தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் வரை புதிய வெளிநாட்டு தொழிலாளர்களை
பணியமர்த்துவதை நிறுத்தி வைத்திருப்பது தொழில்துறையின் அழிவுக்கு
வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பு
ஏற்கெனவே 36,000 தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கியதாகவும், அதனால்
உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் மலேசிய பாமாயில் கழக தலைமை நிர்வாக அதிகாரி
நாகீப் வாஹாப் தெரிவித்துள்ளார்.
உலகின் 2வது மிகப்பெரிய பாமாயில்
உற்பத்தி நாடு மலேசியா. இது இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின்
புலம்பெயர் தொழிலாளர்களையே பெருமளவில் சார்ந்துள்ளது. மொத்த தொழிலாளர்களில்
84% பேர் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். அரசு உத்தரவுக்கு ஆதரவு
தெரிவித்து உள்ளூர் மக்களை இந்த பணிகளில் அமர்த்தி வருகின்றனர். ஆனால்
உள்ளூர்வாசிகள் இந்த பணியில் ஆர்வம் காட்டவில்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பாமாயில் உயிரி எரிபொருளுக்கு
கட்டுப்பாடுகள் விதித்தது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் மலேசிய பாமாயில் கழக தலைமை நிர்வாக அதிகாரி நாகீப்
வாஹாப் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment