
தமிழகத்தில் கரோனா அதிகம் பாதித்த 15 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன்
தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்தினார். கரோனா அதிகரித்து வரும்
நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில்
கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் அதிக அளவில் 2000
என்கிற எண்ணிக்கையை கரோனா தொற்று கடந்த நிலையில் நூற்றுக்கும் குறைவாக
தொற்று இருந்த மாவட்டங்கள் இன்று பல ஆயிரங்களை கடந்து செல்கின்றன.
கரோனா
சமூக பரவல் ஆரம்பமாகிவிடவில்லை என அரசு தெரிவித்தாலும், அறிகுறி
இல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்படுகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோரால்
மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
பின்னர் மாநிலம் முழுவதும் சோதனையை அரசு அதிகப்படுத்தியதை
அடுத்து 37 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 1000 என்கிற
எண்ணிக்கையை கடந்துள்ளது.
தமிழகம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் தொற்று
எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 82 ஆயிரத்தைக்
கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம்
திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் இதுவரை
திரும்பியுள்ளனர். இதில் 4,560 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள்
நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப்
பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே
நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.
இந்திய அளவில் மும்பை போன்ற சில
பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று
தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 25.4
சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 74.6 சதவீதத்தினர் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில்
நேற்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக
செங்கல்பட்டு 8,908, திருவள்ளூர் 8,107, மதுரை 7,597, காஞ்சிபுரம் 4,310,
திருவண்ணாமலை 3,563, வேலூர் 3,445, கடலூர் 1646 , தூத்துக்குடி 2,940,
ராமநாதபுரம் 2,167, சேலம் 2,123, கள்ளக்குறிச்சி 2,049, விழுப்புரம் 1,926,
ராணிப்பேட்டை 1,858, திருநெல்வேலி 2,228, தேனி 2,053, திருச்சி 1,902,
விருதுநகர் 2,749, கோயம்பத்தூர் 1,644, திண்டுக்கல் 1,193, சிவகங்கை 1,188
ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
தமிழகத்தில்
20 மாவட்டங்கள் ஆயிரம் என்கிற எண்ணிக்கையை கடந்துள்ளன. இதில் 13
மாவட்டங்கள் 2000 என்கிற எண்ணிக்கையை கடந்துள்ளன. உயிரிழப்பு 2,236 -ஐக்
கடந்துள்ளது. உயிரிழந்த 2,236 பேரில் சென்னையில் மட்டுமே 1,341 பேர்
உயிரிழந்துள்ளனர். உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவைப்
பின்னுக்குத் தள்ளி சென்னை 82,128 என்கிற எண்ணிக்கையில் உள்ளது.
வேகமாக
மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து பாதிக்கப்பட்ட
மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று அவசர ஆலோசனை
நடத்தினார். மேற்கண்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையை குறைக்க
எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை
ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தொற்றுப்பரவலை தடுக்க குறிப்பிட்ட
மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக
தெரிகிறது.
No comments:
Post a Comment