
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள்
மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதே சமயத்தில்
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக்
கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக
சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.

வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு
சென்னை
அண்ணாசாலை ஸ்பென்ஸர் பிளாசா சிக்னலில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்துப்
பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத், அவ்வழியாக வாகனங்களில்
வந்தவர்களிடம் உங்களின் காலை தொட்டு வணங்குகிறேன், வெளியில் வராதீங்க என்று
கண்ணீர்மல்க கூறினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத்தின், இந்த
விழிப்புணர்வு சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்தது.
இந்தநிலையில் நேற்று மாலை சென்னை அம்பத்தூர், பாடி
மேம்பாலம் பகுதியில் கொரோனா வைரஸ் வடிவிலான ஹெல்மெட்டை அணிந்தபடி
இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு நின்றுகொண்டிருந்தார். அவர், அவ்வழியாக வாகனங்களில்
சென்றவர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனா குறித்து வித்தியாசமான முறையில்
விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரஜீஸ்
பாபுவிடம் பேசினோம். ``நானும் எனது நண்பர் கௌதமும் கொரோனா வைரஸ் குறித்து
பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 144 உத்தரவு
பிறப்பிக்கப்பட்டும் மக்கள் வெளியில் வருவதை தடுக்க என்ன செய்யலாம் என
ஆலோசித்தோம். உடனே ஹெல்மெட்டின் மீது கொரோனா வைரஸின் உருவத்தை
வடிவமைக்கலாம் என யோசித்தேன். அதைத் தொடர்ந்து பேப்பரைக் கொண்டு
ஹெல்மெட்டில் கொரோனா வைரஸ் வடிவத்தை கௌதம் உருவாக்கினார். அதற்கு
பெயின்டிங் அடித்தார். அந்த ஹெல்மெட்டைப் பார்த்த எங்களுக்கே ஒருவித பயத்தை
ஏற்படுத்தியது.
வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு
இதையடுத்து
அந்த ஹெல்மெட்டை நானே அணிந்து கொண்டு நேற்று மாலை பாடி மேம்பாலத்தில்
வாகனச் சோதனையில் ஈடுபட்டேன். அப்போது அவ்வழியாக வந்தவர்களை நிறுத்தி,
`நான்தான் கொரோனா, உங்கள் வாகனத்தின் பின்னால் நான் அமரட்டுமா?' என்று
கேட்டேன். அதற்கு வாகன ஓட்டிகள், `வேண்டாம் சார், நாங்கள் இனிமேல் வெளியில்
வரமாட்டோம்' என்று கூறினர். கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுக்கு மக்கள்
மத்தியில் ஒருவித பயத்துடன் கூடிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.
கொரோனா
வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து வாகனச் சோதனையில் ஈடுபடும்போது மக்கள்
மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வில்லிவாக்கம் காவல் நிலையத்தில்
நேற்று முன்தினம் மட்டும் விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது 10 வழக்குகளும்
நேற்று 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியில்
வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவருகிறது. மளிகைக் கடைகள்,
காய்கறி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வெளியில்
வரும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. கொரோனா ஹெல்மெட்
அணிந்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். மக்கள் வீட்டை
விட்டு தேவையில்லாமல் வெளியில் வராமல் இருந்தால் கொரோனா வைரஸ் பரவுவதை
முற்றிலும் தவிர்த்துவிடலாம்" என்றார்.
இதுகுறித்து
வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டினிடம் கேட்டதற்கு, ``ஆட்டோ மூலம்
பொதுமக்களுக்குக் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். 144 தடை
உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகிறோம்.
தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வருபவர்களை முதலில் எச்சரிக்கிறோம்.
அதையும் மீறி வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்களைப் பறிமுதல்
செய்கிறோம். காவல்துறையினரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல்
வெளியில் வருவது குறைந்துவருகிறது" என்றார்.
No comments:
Post a Comment