
இந்தியாவில், கேரள மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,
தமிழகத்தில் உள்ள எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலோனார் வீட்டில்
முடங்கியுள்ளனர். கொரோனா அச்சத்தால் தமிழக அரசியல்வாதிகள் யாரும் வீட்டை
விட்டே வெளியே வருவதில்லை. ஆனால், கேரளாவில் அரசியல்வாதிகள் களத்தில்
இறங்கி தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக, கேரளாவில்
மலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசி இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள்
கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பத்தனம்திட்டா
மாவட்டத்தில் மலைப்பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவனிப்பாரா
பகுதி ஆதிவாசி மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்தப்
பகுதி கொன்னி தொகுதிக்குள் வருகிறது. அவனிப்புரா பகுதி மக்கள் பசியால்
வாடுவது, குறித்து கொன்னி தொகுதி எம்.எல்.ஏ-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியைச் சேர்ந்தவருமான ஜனீஷ் குமாருக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து
ஜனீஷ் குமார் மாவட்ட ஆட்சியர் பி.பி.நுவிடத்தில் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சியர் , எம்.எல்.ஏ மேலும் ஒரு சிலருடன் அவனிப்புரா பகுதிக்கு
பொருள்களைக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இந்தப் பகுதிக்குச் செல்ல 9
கிலோ மீட்டர் வரைதான் சாலை வசதி உள்ளது. மீதி 3 கிலோ மீட்டருக்குச் செல்ல
சாலை வசதி இல்லாததால், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ ஆகியோர் தாங்களே
பொருள்களைத் தலையில் சுமந்து நடந்து செல்லத் தொடங்கினர். இடைமறித்த சிறிய
ஆற்றையும் கடந்து அந்தப் பகுதிக்குச் சென்று பொருள்களை விநியோகித்தனர்.
இந்தப்
பகுதியில் சுமார் 37 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்கள்
கிராமத்துக்கு மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து அத்தியாவசியப் பொருள்களை
விநியோகித்தது அந்த வெள்ளந்தி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அந்த
மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொரோனா நோய் குறித்தும் எடுத்துரைத்தார்.
தற்போது,
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பசியை
உணர்ந்து நடந்தே சென்று பொருள்களை விநியோகித்த மாவட்ட ஆட்சியர்,
ஏம்.எல்.ஏ-வை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment