அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என் மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பழங்குடியினச் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
தமிழக
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரியில் நேற்று (பிப்.6),
தனது காலணிகளை பழங்குடிச் சிறுவனை அழைத்து கழற்றிவிடச் செய்த சம்பவம்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு
தலைவர்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து
வருகின்றனர். இதனிடையே, தான் அந்தச் சிறுவர்களை தன்னுடைய பேரனாகக் கருதியே
காலணிகளை கழற்றிவிடச் சொன்னதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம்
தெரிவித்திருந்தார்.
தன்னைக் காலணி
கழற்றச் சொன்ன தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிச் சிறுவன் மசினகுடி காவல்
நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
பேட்டியளித்த அச்சிறுவனின் தாயார், "என் மகன் அமைச்சரின் காலணிகளைக்
கழற்றியுள்ளான். அமைச்சர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். அவர் மன்னிப்பு கேட்காமல்
நாங்கள் விட மாட்டோம்.
சிறுபிள்ளைகளை விட்டுவிட்டு என் கணவர்
இறந்துவிட்டார். நான் பிள்ளைகளைக் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ப்பது இந்த
ஊருக்கே தெரியும். என் மகனிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் விடமாட்டேன்" எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment