
ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்,
அக்கட்சிக்கு எதிராக 100 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதோடு ஒரு
கோடி மக்களையும் இணைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் சம்பவம் பீகார்
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின்
செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் அக்கட்சியினர்.

தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிகமாக விவாதிக்கப்படும் நபராக இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
பீகாரைச் சேர்ந்த இவர், முக்கிய அரசியல் கட்சியினருக்குத்
தேர்தல் தொடர்பாக வியூகங்களை வகுத்துத்தரும் ஐபேக் என்ற நிறுவனத்தை நடத்தி
வருகிறார். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி, நிதிஷ்குமார், அரவிந்த்
கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேர்தல்
வியூகம் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த்.
இந்த வரிசையில்
தமிழ்நாட்டில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்காகக் களமிறங்கியது ஐபேக்
நிறுவனம். கூடவே, வேறு சில கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஐபேக்
நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மக்கள் நீதி மய்யம்.
தற்போது தி.மு.க-வுக்காகத் தேர்தல் வேலைபார்த்து வருகிறது கிஷோரின் ஐபேக்
டீம். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம்,
பா.ஜ.க கூட்டணி அரசு அமைந்துள்ளது. கிஷோர், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின்
தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால்,
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப்
பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், பாட்னாவில்
பத்திரிகையாளர்களிடம் பேசியவர், "மகாத்மா காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன்,
லோஹியாவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக, நிதிஷ்குமார் சொல்லி வருகிறார். அதே
நேரத்தில், மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரிக்கும்
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளார். நீங்கள் பா.ஜ.க-வுடனான கூட்டணியைத்
தொடரலாம்.
ஆனால், யாருடைய வழியைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைத்
தெளிவாகக் கூற வேண்டும் என அதிரடியாகப் பேசினார். அதைத்தொடர்ந்து,
``அவர்களுடைய சிந்தனை, சிந்தாத்தம் வேறு என்னுடையது சித்தாந்தம் வேறு.
அதனால்தான், பிரிய வேண்டியதாயிற்று. பீகார், 2005-ல் மிகவும் ஏழை மாநிலமாக
இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில், சில வளர்ச்சி திட்டங்கள் நடந்தாலும், அது
போதுமான வேகத்தில் இல்லை' என்றார். அரசியலில் இளைஞர்களை ஊக்குவிக்கும்
வகையில், `பாத் பீகார் கி' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, மாநிலம்
முழுவதும் தொடங்க இருக்கிறேன்.
பீகார்
கி என்ற திட்டத்தின் கீழ் பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 2.62
லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். இந்த பிரசாரத்தின் கீழ் 1 கோடி மக்களை
இணைப்பதே எனது நோக்கம். பீகார் மாநில பா.ஜ.க 90 லட்சம் உறுப்பினர்களைக்
கொண்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ஒரு 1 கோடி
உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். அத்தோடு இந்த அமைப்பு
அரசியல் கட்சியாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நான்
தனியாகத்தான் நிற்பேன் எந்தக் கட்சியினருடனும் கூட்டணியிலும் சேர மாட்டேன்.
பீகாருக்கு புதிய தலைமை வேண்டும் என்று கருதும் மக்களை
ஒருங்கிணைக்கப்போகிறேன். கடந்த 15 ஆண்டுகளில் பீகாரில் வறுமை மாறவில்லை.
முதல்வர் நிதிஷ்குமாரை கேள்வி கேட்க ஆளில்லை" என்று அவரைக் கடுமையாக
விமர்சனம் செய்து பேசினார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் பீகார்
செயல்பாடுகளைத் தமிழகத்தில் தி.மு.க-வும் உற்று நோக்கி வருகிறது. ஒரே
சமயத்தில் பி.கே பல மாநிலங்களில் பணியாற்றுவது தங்களுக்குப் பாதகமாக
அமைந்துவிடுமோ என்ற கோணத்தில் தி.மு.க-வும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து
வருகிறது.
No comments:
Post a Comment