
திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை கைது
சென்னை
திருமணத்தில்
நண்பர்கள் வற்புறுத்தலால் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை அவரது
நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை
திருவேற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் ஒரு திருமணம்
நடைபெற்றது. மணமகன் புவனேஷ் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல
என்பதால் நண்பர்கள் பழக்கம் அதிகம். அவரது திருமண நிகழ்வில் ஏராளமான
முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அப்பொழுது மணமகனை வாழ்த்த வந்த ஒரு கும்பல், கேக் கொண்டுவந்து வெட்டச்சொன்னது.
கேக்கை வெட்டுவதற்கு கத்திக்குப் பதில் 3 அடி நீள பெரிய
பட்டாக்கத்தியைக் கொடுத்தனர். அதை மாப்பிள்ளை புவனேஷும் வாங்கி, கேக்
வெட்டினார்.
பின்னர் கத்தியை உயர்த்திப் பிடித்து சந்தோஷமாக
அசைத்தார். பின்னர் மணமகளிடம் கத்தியைக் கொடுத்தார். ஆனால் கத்தியின்
நீளத்தைப் பார்த்த மணமகள் மிரண்டு போய் மறுத்துவிட்டார்.
அப்போது
மேடையில் நின்றிருந்த கும்பலில் இருந்த ஒருவர் 4 அடி நீள பட்டாக்கத்தி
ஒன்றைக் கையில் வைத்திருந்தார். அவர் கத்தியை உயர்த்திப் பிடித்து நாக்கைத்
துருத்தி வீடியோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் கத்தியுடன் நடனம்
ஆடினார். மாப்பிள்ளையும் கத்தியை உயர்த்தி போஸ் கொடுத்தார். இதை செல்போனில்
பதிவு செய்த நபர் ஒருவர், வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டார். அது
மணமகனுக்கே வினையாகப் போனது.
காணொலி வைரலாக, கையில்
பட்டாக்கத்திகளுடன் திருமண விழாவைக் கொண்டாடுவது யார் என போலீஸ் அதிகாரிகள்
விசாரித்தனர். மணமகன் மறுவீட்டுக்காக மாமியார் இல்லம் சென்றது விசாரணையில்
தெரியவந்தது.
இதையடுத்து
அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர். சந்தோஷமாக நடக்க வேண்டிய
திருமண நிகழ்வு தேவையற்ற முறையில் நடந்ததால், பிரச்சினையைக் கொண்டுவந்து
சேர்த்துள்ளது. இதற்கு முன்னர் முதன்முதலில் அரிவாளால் கேக் வெட்டி
சிக்கியவர் ரவுடி பினு.
பின்னர் கடந்த மாதம் மதுரவாயலில் அதே
ஸ்டைலில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்ட கல்லூரி
மாணவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். தற்போது புதுமாப்பிள்ளை
புவனேஷும் சிக்கியது குறிப்பிட தக்கது.
பட்டாக்கத்தி வைத்திருந்த
இன்னொரு நண்பரையும் போலீஸார் தேடினர். இவர்களுக்கு பட்டாக்கத்தி
எங்கிருந்து கிடைத்தது, வேறு யாரெல்லாம் பட்டாக்கத்தி கொண்டு வந்தார்கள்,
மாப்பிள்ளையிடம் பட்டாக்கத்தியைக் கொடுத்த நபர் யார் என போலீஸார் விசாரணை
நடத்தினர்.
இதில் நண்பர்கள் மணமகனின் நண்பர்கள் விக்னேஷ் குமார்,
சதீஷ், விக்னேஷ் ஆகியோர் சிக்கினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் 4 பேரும் இனி
அவ்வாறு செய்ய மாட்டோம் என உறுதி மொழி அளித்து எழுதிக்கொடுத்ததன்பேரில்
அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment