
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருமணமான அரசு
ஊழியர், பெற்றோரின் சிகிச்சை செலவைத் திரும்பப் பெறத் தகுதியில்லை என்ற
காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம்
அறிவித்துள்ளது.
பெரம்பலூரில் உதவி வேளாண் அதிகாரியாகப் பணிபுரியும்
கதிரவன், தனது தந்தையின் புற்றுநோய் கட்டி சிகிச்சைக்காக அப்போலோ சிறப்பு
மருத்துவமனையில் அனுமதித்து, 5 லட்சத்து 72 ஆயிரத்து 29 ரூபாயைச்
செலவழித்துள்ளார்.
யுனைடெட் இந்தியா
காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனது மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்திலிருந்து பணத்தைத் திரும்பத் தரக்கோரி மாவட்டக் கருவூலத்தில்
விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தைப் பரிசீலித்த பெரம்பலூர் மாவட்ட
கருவூல அதிகாரி, திருமணமான அரசு ஊழியரின் பெற்றோருக்குச் செலவிடப்படும்
தொகையைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி இல்லை என உத்தரவிட்டார்.
இந்த
உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மருத்துவச் செலவுத் தொகையை வழங்க
உத்தரவிடக் கோரியும் கதிரவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த்
வெங்கடேஷ், அரசு ஊழியரின் பெற்றோரின் சிகிச்சை செலவைத் திரும்பப் பெறத்
தகுதியில்லை என்ற காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது என அறிவித்து
உத்தரவிட்டார்.
மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி
இல்லை என, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த கருவூல அதிகாரியின் உத்தரவை
ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், 4 வார காலத்திற்குள் கதிரவனின்
கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, சேர வேண்டிய தொகையை வழங்க மாவட்ட
நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment