
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில்
போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மோடி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று
குடியுரிமைச் சட்டம், போராட்டங்கள் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த
நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலம், பர்கிட்டில் தேர்தல் பிரசார
பேரணியில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்தும் காங்கிரஸ் குறித்தும்
பேசியுள்ளார்.
அதில், ``காங்கிரஸ்
மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தைரியம் இருந்தால் பாகிஸ்தான்
குடிமக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவேன் என்றும் மோடி அரசாங்கம்
நீக்கிய ஆர்டிகிள் 370 சட்டத்தை திரும்ப அமல்படுத்துவேன் என்றும்
அறிவிக்கட்டும்" என சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து
பேசிய அவர் ``நாட்டில் பொய் மற்றும் அச்சத்தை பரப்பும் அரசியலை காங்கிரஸ்
கட்சியினர் செய்கின்றனர். நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக்
கொண்டுவந்தோம். தற்போது இதுகுறித்தும் பொய்களைக் கூறி வருகின்றனர்.
குடியுரிமை சட்டம், நாட்டின் எந்தவொரு குடிமகனையும் பாதிக்காது. மீண்டும்
சொல்கிறேன், இந்தச் சட்டத்தால் எந்தவொரு குடிமகனும் பாதிக்கப்படமாட்டான்.
அண்டை நாடுகளில் பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்காக இந்தச்சட்டம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு நூல் புனிதமானது.
எங்களுடைய கொள்கைகளை விவாதித்து ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க
வேண்டும் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பேசுவதை நாங்கள்
கவனிக்கிறோம். உங்கள் பின்னாலிருந்து, சில கட்சிகளும் நகர்ப்புற
நக்ஸல்களும் தாக்குதல்கள் நடத்துகின்றன" என்றார்.
குடியுரிமை
சட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``CAA சட்டம் மீதான
எதிர்ப்பு, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது. சிறுபான்மை
சமூகத்திலிருக்கும் மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்கிற பேச்சுக்கே
இடமில்லை. மசோதாவில் அத்தகைய நிலைப்பாடுகள் எதுவும் இல்லை. Nehru-Liaquat ஒப்பந்தத்தின்
ஒருபகுதிதான் இந்தச் சட்டம். வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் 70 ஆண்டுகளாக
இதை செயல்படுத்தவில்லை. எங்களுடைய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது"
என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment