
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கியுள்ளது.
வண்ணமயமான வானவேடிக்கைகள், கண்ணைக் கவரும் மின் விளக்குகள் அலங்காரங்கள்,
கேக் வெட்டி கொண்டாடப்படும் `ஹேப்பி நியூ இயர்' முழக்கங்கள் என்று புது
வருடத்தின் தொடக்கம் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாகத்தான்
இருக்க வேண்டும்.

அளவுக்கு
அதிகமாகக் குடித்துவிட்டு, டூவீலர் சாகசம் செய்வது, பைக் ஸ்டாண்டை
சாலையில் தீப்பொறி தெறிக்கத் தேய்த்து வருவது.
இஷ்டத்துக்கு வண்டியை குண்டக்க மண்டக்க ஓட்டுவது மூலமே ஒரு சிலருக்குப் புத்தாண்டு முழுமை அடைகிறது.
இப்படிச்
செய்பவர்கள் மூலம் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ, சாலையின்
ஓரத்தில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு
உள்ளாவதுடன், விபத்தில் சிக்கவும் செய்கின்றனர்.
இந்தப் புத்தாண்டு தினத்தன்று 250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
புத்தாண்டு அன்று சென்னையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்கள் எண்ணிக்கையைப் பின்வரும் படத்தில் காணலாம்.
இந்த
விபத்துக்களில் பெரும்பாலானவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களும்
டூவீலர் சாகசம் செய்தவர்களும் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களும்தான்.
இவர்களினால் சாலையின் ஓரம் நடந்து சென்றவர்களும் விபத்தில் சிக்கிய
சம்பவங்கள் பல உண்டு.
பெருநகர சென்னையைப் பொறுத்தமட்டில்,
மதுபோதையில் மற்றும் பைக் ரேஸினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பலகட்ட
முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மக்கள்
கூட்டம் அதிகம் கூடும் இடங்களான, மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, OMR,
ECR போன்ற முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 15,000-க்கும் அதிகமான போலீஸார்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் ரோந்துப்
பணிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மக்களுக்குத் தேவையான உதவிகளை
மேற்கொள்ளுவார்கள்.
சென்னையில் உள்ள 38 பெரிய மேம்பாலங்கள் உட்பட
மொத்தமுள்ள 75 மேம்பாலங்களும் மூடப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத்
தடுப்பதற்காகத் தமிழக அரசு கொண்டுவந்த `அம்மா ரோந்து வாகனம்' மூலம்
ரோந்துப் பணி நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் கடற்கரைகளில்
கோபுரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையின்
பல்வேறு முக்கிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில்
நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பெண் போலீஸார் மப்டியில் கண்காணிப்புப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஏற்பாடுகள் அனைத்துமே எல்லா
வருடங்களும் பண்ணப்படுபவைதான். எல்லா வருடங்களும் விபத்துகளும் மரணங்களும்
தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றது. டாஸ்மாக்கை திறந்து வைத்து அதில்
இத்தனை கோடி வருமானம் ஒரு நாளில் ஈட்டப்பட வேண்டும் என்று இலக்கையும்
நிர்ணயம் செய்துவிட்டு, குடித்துவிட்டு விபத்தில் சிக்குபவர்களுக்கு
சிகிச்சையையும் அளிக்கிறது இந்த அரசு.
விபத்தைக்
குறைக்க இவ்வளவு நடவடிக்கை எடுக்கும் அரசு. இந்த ஒரு நாள் டாஸ்மாக்கை
மூடினால், இன்று நிகழவிருக்கும் எத்தனையோ மரணங்கள் தடுக்கப்படும், எத்தனையோ
விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், அதை ஒருபோதும் செய்யாது இந்த அரசு.
இலக்கு நிர்ணயம் செய்து வியாபாரம் செய்பவர்கள் எப்படி கடையை மூடுவார்கள்..?
புத்தாண்டு புதுவசந்தத்தைத் தரக்கூடியது. இந்த நாளை மதுபோதையில் பைக் ரேஸில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சிறப்பாய் செலவிடுங்கள்...
No comments:
Post a Comment