செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள கொண்டமங்களம்
பகுதியில் உயர்மின் அழுத்த கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெற்று
வருகிறது.`ஒரு அடி ஆழத்திலேயே உயர்மின் அழுத்த கேபிள்கள்
புதைக்கப்படுகின்றன. இதனால் மின்கசிவு ஏற்பட்டாலோ, மின் கேபிள்கள்
செல்லுவது தெரியாமல் பள்ளம் தோண்டினாலோ பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும்.
ஊருக்கு வெளிப்புறமாக அந்த கேபிள்களைப் புதைக்க வேண்டும்' என அப்பகுதி
மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மறைமலைநகர் மின்சார வாரிய அலுவலகத்திலும் சென்று புகார் மனு அளித்தனர்.
ஆனால் அதிகாரிகளோ, `இது அரசு வேலை என்பதால் யாரும் எங்களை
தடுக்க முடியாது' எனத் தெரிவித்திருக்கிறார்கள். கிராம மக்களின்
எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கேபிள்களைப் புதைத்து வந்ததால் கொதிப்படைந்த
அப்பகுதியினர், நேற்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத்
தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் காவல்துறையினரை வரவழைத்து பணிகளை
மேற்கொண்டனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்த பெண்களைக் கொண்டு வந்த
வேனில் ஏறுங்கள் என வற்புறுத்தினார்கள். ஆனால், அந்தப் பெண்கள் நாங்கள் ஏன்
வேனில் ஏற வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும்
பொதுமக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கொதிப்படைந்த
மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம்,```நாலு ஆம்பளைங்கள தூக்கினா, பொம்பளைங்க
வாய், தானா அடங்கிடும். பொம்பளைங்கள சீண்டி விட்டுட்டு ஆம்பளைங்க
பதுங்கிட்டானுங்களா?'' எனக் கடுமையான வார்த்தைகளால் பேசினார்.
இதைக்
கேட்டு அந்தப் பெண்கள் கொதிப்படைந்தனர். கூட்டத்தில் இருந்த பெண், ``அவங்க
ஆம்பளையா, இல்லையாங்கறத நீங்க சொல்லக் கூடாது. அதை நாங்க சொல்லணும்.
உங்களுக்கு தில் இருந்தா அவங்க இருக்கும்போது வாங்க" என்கிறார். மீண்டும்
``ஆம்பளைங்கள வரச்சொல்லுங்க." எனக் காவல்துறையினர் சத்தம் போட, உங்கள
மாதிரி நாங்க லட்சக்கணக்குல லஞ்சம் வாங்கல" எனக் கொந்தளித்தனர்.
காவல்துறையினர்
அந்தப் பெண்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து வழக்கு பதிவுசெய்வோம் என
மிரட்டியதால் அந்த கிராமமே பதற்றத்தில் உள்ளது. பெண்களிடம் தரக்குறைவாகப்
பேசியதாக பெண்கள் அமைப்புகளும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கண்டனங்கள்
தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக
இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் பேசினோம். ``எங்கள் பகுதியில் கேபிள் புதைக்கக்
கூடாது என ஒரு சில குடும்பத்திலுள்ள பெண்கள் மட்டுமே தொடர்ந்து பிரச்னை
செய்கிறார்கள். பலமுறை நாங்கள் அவர்களை எச்சரித்தும், அவர்கள் பிரச்னை
செய்வதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள். எங்களிடம் பெண் போலீஸ் யாரும்
இல்லை. இதனால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. `ஆம்பள இருந்தா வரச்
சொல்லுங்கள்' என்றுதான் நான் சொன்னேன். மற்றபடி அவர்களைத் தப்பா பேசணும்
என்ற நோக்கம் எனக்கு இல்லை" என்றார்.

No comments:
Post a Comment