
சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் விதிமுறைகளுடன் கேசினோ கொண்டு
வருவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று(டிச.27) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாகளர்களிடம் கூறியதாவது:
"நாட்டில்
உள்ள யூனியன் பிரேதசங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நிர்வாகம்,
மருத்துவம், மனிதவள மேம்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி நிர்வாகம் ஆகிய
நான்கில் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 துறைகளை கணக்கில் எடுத்து ஆய்வு
செய்துள்ளனர்.
அதில் நான்கில் முதல் இடத்தை புதுச்சேரி பெற்றுள்ளது. விவசாயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
புதுச்சேரியில் மூன்று ஆண்டுகளாக எங்கள் ஆட்சி நடைபெற்று
வருகின்றது. மத்திய அரசின் உதவி கிடைக்கவில்லை. அதனால் மாநிலத்தின் வருவாயை
வைத்து வளர்ச்சியை தேட வேண்டியுள்ளது.
புதுச்சேரியின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 11.4 சதவீதமாக உள்ளது. மத்திய அரசை நிதி கேட்டால்
ஜிஎஸ்டிபி எல்லைக்கு உள்ளே புதுச்சேரி இருக்கும் காரணத்தால் தர மறுக்கிறது.
மத்திய அரசிடம் மானியம் மட்டும் கேட்கவில்லை, 7-வது ஊதிய கமிஷன்
அமல்படுத்தியதற்கான நிதி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய
நிதி, பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகப்படியான உயர்த்தி தருவது
ஆகியவைகளை கேட்கின்றோம்.
எதற்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
மத்திய அரசின் எந்தவித உதவியும் இல்லாவிட்டாலும், புதுச்சேரியில் எங்களது
அரசுக்கு தினமும் தொல்லைகள் கொடுத்தாலும் அதையெல்லாம் மீறி 5 விருதுகளை
பெற்றிருப்பது என்பது இமாலய சாதனை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும்
இதுபோன்ற வளர்ச்சியை பெறவில்லை.
எங்களுடைய அரசுக்கு மத்தியில்
இருந்து முறையாக கிடைக்கும் தொல்லை நீங்கினால் புதுச்சேரியின் வளர்ச்சி
அபரிதமாக இருக்கும். மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து
ட்விட்டரில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமை செயலர் அஸ்வனிகுமார்
தலைமையிலான நிர்வாகத்தால் இந்த இடம் கிடைத்திருப்பதாக கருத்து
தெரிவித்துள்ளார்.
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு
கூறியுள்ளார். இதற்கு பலரும் பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து
கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். எனது தலைமையிலான அமைச்சர்கள்ளாலேயே இந்த
சாதனை கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுநர் எதிர்க்கட்சி
தலைவரைப்போல் செயல்படுகின்றார். புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை
அங்கீகரிக்காதவர். கல்வித்துறை ஒழுங்காக செயல்படவில்லை என்று கூறினார்.
ஆனால் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கூறியுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து அதிகாரிகளையும் சுதந்திரமாக செயல்படவிட்டால்
இன்னும் சிறப்பாக செயல்படுவோம்.
ஆளுநர் கிரண்பேடி தனக்கு அதிகாரம்
இல்லாதபோது புதுச்சேரி அரசை குறை கூறுவது, வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது,
மக்களுக்கான திட்டங்களை முடக்குவது, அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து
மிரட்டுவது இதைத்தவிர ஒன்றையும் செய்ய முடியவில்லை.
நானும்,
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சிகளும்தான் இந்த சாதனையை
புரிந்துள்ளோம். இந்த சாதனை தனி ஒருவனுடையது இல்லை. புதுச்சேரி மக்களின்
பங்கும் உள்ளது. புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை மத்திய அரசு
பாராட்டும்போது, ஆளுநரும் பாராட்டினால் பெருமை. கிரண்பேடி தரம் தாழ்ந்து
புதுச்சேரி அரசின் செயல்பாடை அங்கீகரிக்க முடியாமல் உள்ளார். மனசாட்சி
இல்லாதவர்.
2020 புத்தாண்டு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். மத்திய
அரசின் இந்த சாதனை பாராட்டு புதுச்சேரி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும்
கிடைத்த பெருமை. இரவு, பகல் பாராமல் உழைத்த அதிகாரிகளுக்கு நன்றியும்,
பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன். அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இது
புத்தாண்டு பரிசு. இந்த வளர்ச்சி தொடரும்.
புதுச்சேரிக்கு யார்
நன்மை செய்வார்கள்? என்று புதுச்சேரி மக்களுக்கு தெரியும். முட்டுகட்டைகள்
போட்டாலும் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவோம் என்பதை நிரூபித்துள்ளோம்.
இந்த சாதனையில் கிரண்பேடியின் செயல் ஒன்றும் இல்லை. திட்டங்களை தடுத்தது
மட்டுமே அவரது பணி.
கேசினோவை தடுப்பதாக கூறும் கிரண்பேடி, கோவாவில்
கேசினோ இருக்கிறது. அங்குள்ள பாஜக அரசிடம் கேசினோவை மூட சொல்வாரா?
புதுச்சேரியில் கேசினோ வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முடிவு
செய்யப்பட்டது. புதுச்சேரியின் வருமானத்தை பெருக்க ஆளுநர் என்ன உதவி
செய்தார்? அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும்
நிறுத்தி வைக்கின்றார்.
இதனால்தான் குடியரசுத் தலைவர் ராஜ்பவனில்
தங்கியிருக்கும்போதே கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி அவரிடம் மனு அளித்தோம்.
புதுச்சேரி சுற்றுலா பகுதி. சுற்றுலாவுக்கு என்ன தேவையோ அதை
கொண்டுவருவோம். கோவா, சிக்கிம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கேசினோ
உள்ளது. சுற்றுலா மாநிலமாக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் விரும்புவதை
கொடுப்போம். அதற்கு தேவையான விதிமுறைகளை கொண்டு வருவோம்" என்றார்.
No comments:
Post a Comment