
"சமமான கற்றல் வாய்ப்பை அரசே பறிக்கிறது!"
"ஆணையரின்
உத்தரவின் பேரில் அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளுடன்
தொடக்கப்பள்ளிகள் இணைக்கப்படும். உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே
இணைக்கப்பட்ட பள்ளிகளையும் நிர்வகிப்பார்கள். இணைக்கப்பட்ட இந்தப்
பள்ளிகளுக்கு அந்தப் பள்ளிகளின் உயர்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களே
பாடம் நடத்துவார்கள் என்று கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்க்கும் மத்திய அரசின் வரைவு தேசியக்
கல்விக்கொள்கை ஒருங்கிணைந்த பள்ளி வளாகங்கள் என்கிற பெயரில்
குறிப்பிடுவதும் இதைத்தான்.

இதன்மூலமாக பிள்ளைகளுக்கான சமமான கற்றல் வாய்ப்பை அரசே பறிக்கிறது.
இத்தனையும் பறித்துவிட்டு ஐந்தாவது மற்றும் எட்டாம்
வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ்
ஆட்சியில்கூட மதராஸ் மாகாணத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்தான்
பள்ளிகளில் பயிற்றுமொழியாக இருந்தது. ஆங்கிலம் ஒரு பாடமாகக்கூடக்
கருதப்படவில்லை. மக்கள் தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும்
என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய ஆங்கில வழிப்பாடம் என என்றுமே அவர்கள்
கேட்கவில்லை. 2020 கல்வி ஆண்டிலாவது அரசு சட்டத்தை மதித்துத் தாய்மொழி
வழிக்கல்வியைப் பரவலாக்க வேண்டும், பள்ளிகளை இணைப்பதை நிறுத்திவிட்டு
அண்மைப் பள்ளிகளாக ஊராட்சிப் பள்ளிகளை அறிவித்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம்
கற்பதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்." - பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்
சூழலியல் அதிர்வலைகள்!
"இந்த
ஆண்டு தமிழகம் சந்தித்த சுற்றுச்சூழல் சவால்கள் உண்மையில் மிரளவைப்பவை.
நாட்டின் தலைநகரைவிடத் தமிழகத் தலைநகர் மோசமாக
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது. ஆனால், மாசுபாடு அவ்வளவு தீவிரமாக
இல்லையென்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள் அரசு அதிகாரிகளும்
அமைச்சர்களும்.
உலகம்
முழுக்கக் காலநிலை மாற்றத்திற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டு
மென்று நடந்த போராட்டங்களின் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்தது.
சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் குழந்தைகளும் கடந்த
செப்டம்பர் மாதம் 'அரசுகளே, எங்கள் எதிர்காலத்தை மூழ்கடித்துவிடாதீர்கள்'
என்ற கோஷத்தோடு வீதியிலிறங்கிக் காலநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
அது மாநிலம் முழுக்கப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2019-ம் ஆண்டு
சுற்றுச்சூழல்மீது மக்களுடைய அக்கறை அதிகமாகியுள்ளதை, அதிகமாகியுள்ள
சூழலியல் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இந்தப் போக்கு நம்பிக்கையை
விதைக்கிறது. இந்தப் போராட்டங்களில், எதிர்காலத்திற்கான வெளிச்சம்
தெரிகிறது!" - கோவை சதாசிவம். சூழலியல் செயற்பாட்டாளர்
"அது சட்டத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல!"
"பெண்கள்மீதான
வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, கூட்டுப்
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் சமீபகாலமாகத் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.
பொள்ளாச்சி போன்ற சில சம்பவங்கள் மட்டுமே வெளியில் வருகின்றன.
பாதிக்கப்படும் பெண்களில் வெறும் 10 சதவிகிதம் பேர்தான் போலீஸில் புகார்
தர முன்வருகிறார்கள். பெரும்பாலான வழக்குகளில் விரைவாக நீதி கிடைப்பதில்லை.
பல வழக்குகளில் பத்து ஆண்டுகள்கூட ஆகின்றன. இவ்வளவு காலதாமதம் ஆவதால்,
நீதி பெற வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருக்கும் பெண்கள்கூடச்
சோர்ந்துவிடுகிறார்கள். எனவே, மாவட்டம்தோறும் இதற்கென விரைவு நீதிமன்றங்கள்
அமைத்து, விரைவில் நீதி கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இல்லையென்றால், பாலியல் வன்கொடுமைகளில் தொடர்புடைய குற்றவாளிகள்
என்கவுன்டரில் கொல்லப்படுவதைக் கொண்டாடும் நிலைதான் நீடிக்கும். அது
சட்டத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல." - சுகந்தி, பெண்ணுரிமை செயற்பாட்டாளர்
"மொழித்திணிப்பை முறியடிக்க..."
"இந்திமொழியில்
அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம்
செய்யாமல் அப்படியே இந்திப் பெயரைத் தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய
அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம்,
பதினைந்து நாடுகளாகப் பிரிந்துபோனதற்கு முதன்மையான காரணம் - மற்ற 14 மொழி
பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச்
செயல்படுத்தியதும்தான்!
இந்திய
ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி - சமற்கிருதத்
திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும்
பேராபத்து சூழ்ந்துவருவதைப் புரிந்துகொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் -
தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித்திணிப்பு
எதிர்ப்பையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள்
போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!" - பெ.மணியரசன், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்
"இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி!"
"ஒவ்வோர்
ஆண்டும், எழுச்சியோடு கூடிய மக்கள் போராட்டங்கள் நிகழத்தான் செய்கின்றன
என்றாலும், 2019-ம் ஆண்டு இதில் மிகவும் வேறுபட்டதாகவே தோன்றுகிறது.
அமலாக்கத் துறையினரின் பயத்தில் ஆளுமை இழந்த மாநில அமைச்சரவை; போராட்ட
முனைப்பு கொண்ட மக்கள்; மத்திய அரசின் உளவுத்துறை வழிகாட்டுதலில்,
எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டுவிட்ட போலீஸ் ராஜ்ஜியத்தால்,
நசுக்கப்படும் மனித உரிமைகள்... இதுதான் இன்றைய தமிழகம். தமிழ்நாட்டில்
ஜனநாயகப் போராட்டங் களுக்கென ஒரு சிறந்த பாரம்பர்யம் இருந்தது.
காங்கிரஸ்
இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்டு இயக்கம் என்று அனைவருமே ஜனநாயகப்
போராட்டங்களுக்கு மதிப்பளித்து வந்துள்ளனர். போராட்டங்கள் நடத்து பவர்கள்
கௌரவம் மிக்கவர்களாகக் கருதப்பட்டனர். இன்று வெறும் சட்டம் - ஒழுங்கு
பிரச்னையாக மட்டுமே போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. போராடுபவர்கள்
கிரிமினல் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி!"
- சி.மகேந்திரன், இடதுசாரி சிந்தனையாளர்
"இதுவா நீர் மேலாண்மை?"
ஆளும்கட்சியினர்
கோயில்களில் சிறப்பு யாகபூஜை செய்தனர். அண்டா நீருக்குள் அமர்ந்து 'வருண
ஜெபம்' செய்கிறேன் என்று சிலர் அந்த நீரையும் அழுக்காக்கியதே மிச்சம்.
இதுவா நீர் மேலாண்மை? "நிலத்தில் பெய்யும் மழையில் 16% நிலத்தடி நீராகச்
சேமிக்கப்பட வேண்டும் என்பது நியதி. மரங்கள் அடர்ந்த நிலமாக இருந்தால் 25%
சேமிக்கப்படும். ஆனால் கான்கிரீட் காடான சென்னையில் 4% அளவுகூட
சேமிக்கப்படுவதில்லை. இந்திய ஒன்றியம் 40% நிலத்தடி நீரைச்
சார்ந்திருக்கும் நிலையில் தமிழ்நாடு 70% அதைச் சுரண்டியே வாழ்கிறது.
எனவே
மழைநீரைச் சேமிக்காமல் எந்த நீர் மேலாண்மையையும் சாதிக்க முடியாது.
நகரங்களின் கழிவுநீரை 100% மறுசுழற்சி செய்யும் திட்டங்களும்
முடுக்கிவிடப்பட வேண்டும். அதற்கு அரசு தொலைநோக்குத் திட்டங்களைப் பின்பற்ற
வேண்டும். நீர்ப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை
ஏற்படுத்தும் என்கிற நிதி ஆயோக்கின் எச்சரிக்கையையும் மனதில் கொள்ள
வேண்டும். `மழைநீர்' வரதராஜன் சொல்வார்: "500 சதுரஅடி பரப்புள்ள 20,000
வீடுகளின் மொட்டைமாடியில் பெய்யும் ஓராண்டு மழையை நிலத்தடியில் சேமித்தால்
அது மேட்டூர் அணையின் கொள்ளளவு நீருக்குச் சமம்" என்று. நாம் எத்தனை
மேட்டூர் அணைகளை இழந்துகொண்டிருக்கிறோம்?!" - நக்கீரன், சூழலியல் செயற்பாட்டாளர்
"சாதி பார்த்தே நீதி!"
"இடுகாடின்றியும்,
இடுகாட்டுக்குப் பாதை மறுக்கப்பட்டதால் பாலத்தின் மீதிருந்து பிணத்தைக்
கயிறுகட்டி இறக்கியெடுத்தும் தலித்துகள் அல்லாடுகையில் ஏறெடுத்தும் பாராத
அரசு, மேட்டுப்பாளையத்தில் மாண்ட 17 பேரையும் அவசரமாக எரித்து அழித்தது.
கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு போராடியவர்களில் ஒருவரை
குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்தியுள்ளது. தேர்தலின்போதான பொன்பரப்பி
வன்முறையாளர்கள் மனக்கண்ணிலேயே இருக்கிறார்கள். அந்த கும்பலில் பலருக்கும்
திடகாத்திரமான உடல்வாகு இல்லை; நேர்த்தியான உடையில்லை; செருப்பில்லை;
எண்ணெயற்ற பரட்டைத்தலை.
ஆனால்
மனம் முழுக்க சாதிவெறியும் அதன் மறுவடிவமாய் உருட்டுக்கட்டையும் ஏந்தி
அவர்களையொத்த தலித்துகளின் வீடுகளையும் பண்டபாத்திரங்களையும் அடித்து
நொறுக்கியும் தீராத ஆத்திரம் வசவானது. எது எதிர்ப்படினும் அழித் தொழிக்கும்
வன்மத்தை உடல்மொழியால் காட்டியபடி விரைந்த அவர்கள் ஒருநாளில்
சாதிவெறியர்களாகிவிடவில்லை. குடும்பம், சுற்றம், கோயில், திருவிழா,
கல்விக்கூடம், ஊடகம் என ஒவ்வொன்றும் தன்பங்கிற்கு ஊட்டிய விஷத்தினால்
அவ்விதமாகியிருக்கும் அவர்களை இக்கட்டுரை என்ன செய்யும்?" - ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
"உள்ளும் வெளியும் ஊழல்மயம்!"
"தமிழகத்திற்கு
மூன்றாம் இடம்! ஆனால் நாம் பெருமைப்பட முடியாது. லஞ்ச-ஊழல் மிகுந்த
மாநிலங்களில் மூன்றாமிடம் என்பது பெருமைக்குரிய விஷயமா என்ன..? பன்னாட்டுத்
தகவல்தொழில்நுட்ப நிறுவனமான சி.டி.எஸ், தனது புதிய அலுவலகக் கட்டடத்திற்கு
ஒப்புதல் வழங்க, தமிழக அரசுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுத்தது. இதைக்
கண்டுபிடித்த அமெரிக்க நீதிமன்றம், அமெரிக்கப் பங்குச்சந்தை நிறுவனம்
சி.டி.எஸ்ஸுக்கு ரூ.175 கோடி அபராதம் விதித்தது.
குற்றத்தை
ஒப்புக்கொண்ட நிறுவனம், அபராதம் கட்ட சம்மதித்தது. லஞ்சம் கொடுத்தவருக்கு
தண்டனை வழங்கியாயிற்று; வாங்கியவர் களுக்கு..? சட்டத்தின் ஓட்டைக்குள்
புகுந்து விடுதலையாகிய, மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கிக்கொண்டு,
அரசியல்வாதிகளின் ஊழலுக்குத் துணைபோகும் அதிகாரிகள் இருக்கும்வரை எப்படி
ஊழல் ஒழியும்?" - செந்தில் ஆறுமுகம், சமூக செயற்பாட்டாளர்
"மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!"
"நரேந்திர
மோடி - அமித் ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம்தான் சுதந்திர
இந்தியா இதுவரை கண்ட அரசுகளிலேயே மிகப்பெரிய அளவுக்கு மாநில அரசுகளுக்கு
எதிரான ஒரு அரசாங்கம் என்பதைப் புரிந்துகொள்ள நாம் நிறைய மெனக்கெடத்
தேவையில்லை. மொழிவாரி மாநிலங்கள் என்கிற கருத்தாக்கத்தையே
தொடக்கத்திலிருந்து ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ், இனி காஷ்மீருக்கு
நடந்ததுதான் எல்லா மாநிலங்களுக்கும் நடக்கும் என மிரட்டிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில்
அரசியல் இறையாண்மை மக்களிடமும், சட்ட இறையாண்மை மத்திய, மாநில அரசுகளிடம்
பிரித்தளிக்கப்பட்டும் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்
அறிஞர் அண்ணா. மாநிலங் களிடமிருந்து சட்ட இறையாண்மையைப் பறிப்பதும்
மக்களிடமிருந்து அரசியல் இறையாண்மையைப் பறிப்பதும் ஒன்றுதான். இரண்டுமே
கலகத்தில்தான் சென்று முடியும்." - ஆழி செந்தில்நாதன், சமூக செயற்பாட்டாளர்
"தரமான படைப்புகளின் வருகை குறைவே!"
"தமிழ்
சினிமாவில் எழுத்தாளர்கள் பற்றாக்குறை காரணமாகத் தரமான படைப்புகளின் வருகை
குறைவாகவே உள்ளது. காப்புரிமைச் சட்டத்தைப் பற்றித் தெளிவில்லாததால் கதைத்
திருட்டுப் புகார்களும் அதிகரித்துவருகின்றன. படங்களின் எண்ணிக்கை
அதிகரித்தும், நடிகர்கள் பிஸியாக இருந்தும் படங்களின் வெற்றி சதவிகிதம்
இன்னும் 10 சதவிகிதம்தான் இருப்பதற்குக் காரணம், நல்ல கதையும்
எழுத்தாளர்களும் இல்லாததுதான்.
மற்ற
மாநிலங்களைவிடத் தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலை குறைவாகவே இருப்பினும்
திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது ஒரு சாராருக்கு இன்னும் செலவு
பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. சினிமாத்துறையின் எதிர்காலத்தையும்
வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வரிச்சுமையைக் குறைக்க வேண்டும். அதே
சமயத்தில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவிடும் திட்டங்களையும் அரசு
நடைமுறைப்படுத்த வேண்டும்." - எஸ்.ஆர். பிரபு, திரைப்படத் தயாரிப்பாளர்
-
2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி
பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களின் அலசல்களின் துளிகள்தான் இவை. முழுமையான
அலசல்களை ஆனந்த விகடன் இதழில் 'டாப் 10 பிரச்னைகள்' தலைப்பின்கீழ் பார்க்க
> https://www.vikatan.com/anandavikatan/01-jan-2020
*
சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட
வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான
கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும்
வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1
வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க >
http://bit.ly/2sUCtJ9
No comments:
Post a Comment