Latest News

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையொட்டி, டெல்லியில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருக்கும் பரூக் அப்துல்லாவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கடுமையான குரலில் மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்

அதேசமயம், கடந்த கூட்டத் தொடரைப் போன்று ஆக்கப்பூர்வமாகச் செல்ல வேண்டும், அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 20 அமர்வுகளாக டிசம்பர் 13-ம் தேதிவரை நடக்கிறது. அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும், சுமுகமாக கூட்டத்தை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 27 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், வி. முரளிதரன், தெலங்குதேசம் கட்சியில் இருந்து ஜெயதேவ் கலா, காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சதிஸ் மிஸ்ரா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து டேஹ்ரீக் ஓ பிரையன், சுதிப் பந்தயோபாத்யாயே, லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சிராக் பாஸ்வான், அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், அப்னா தளம் சார்பில் அனுப்பிரியா படேல், மதிமுக சார்பில வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், திமுக சார்பில் டிஆர்.பாலு, சமாஜ்வாதிக் கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்

இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவல் சட்டத்தில் காவலில் இருக்கும் மக்களவை எம்.பி.பரூக் அப்துல்லாவை விடுவித்து, கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், சிதம்பரத்தைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியது குறித்து அமைச்சர் ஜோஷி கூறுகையில், "கடந்த கூட்டத் தொடரைப் போன்று இந்த கூட்டத்தையும் ஆக்கப்பூர்வாக கொண்டு செல்ல வேண்டும். அனைத்து விஷயங்களையும் விதிகளுக்கு உட்பட்டு ஆலோசிக்கவும், விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என மோடி பேசினார் " எனத் தெரிவித்தார்

அனைத்துக் கட்சிக்கூட்டம் முடிந்தபின் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், " கடந்த 3 மாதங்களாக தடுப்புக்காவலில் இருக்கும் பரூக் அப்துல்லாவை விடுவித்து அவரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சிதம்பரத்தையும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" எனத்தெரிவித்தார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், " குளிர்காலக் கூட்டத்தொடரில் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை ஆகியவற்றை எழுப்புவோம்" எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.